விக்கிரவாண்டியில் சாலை விரிவாக்க பணிக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம்


விக்கிரவாண்டியில் சாலை விரிவாக்க பணிக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 11 May 2022 4:58 PM GMT (Updated: 11 May 2022 4:58 PM GMT)

விக்கிரவாண்டியில் சாலை விரிவாக்க பணிக்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.


விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி கடைவீதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கம், மழைநீர் வடிகால் வாய்க்காலை அகலப்படுத்தி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்காக சாலையின் இருபுறங்களிலும், உள்ள ஆக்கிரமிப்புகள் அளவீடு செய்யப்பட்டது. 

இதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். இதைத்தொடர்ந்து நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.  

அதன்படி நேற்று காலை கோட்ட பொறியாளர் சிவசேனா தலைமையில் உதவி உட்கோட்ட பொறியாளர் தன்ராஜன் மேற்பார்வையில் உதவி பொறியாளர் அனிதா, சாலை ஆய்வாளர்கள் அருள்மொழி, சாந்தி, செந்தமிழ் செல்வி, அன்புக்கொடி மற்றும் 15 -க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் அடங்கிய குழுவினர் நேரில் வந்து பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். 

இதில் ஒரு கோவில் கட்டிடத்தின் முன் மண்டபம் மற்றும்  மதில் சுவர் ஆகியனவும்  இடிக்கப்பட்டது. அப்போது, தாசில்தார் இளவரசன், பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை, துப்புரவு ஆய்வாளர் விஸ்வநாதன், மேற்பார்வையாளர் ராமலிங்கம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், மின் வாரிய பணியாளர்கள் உடனிருந்தனர். 

முன்னதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன், சப்- இன்ஸ்பெக்டர் தேவரத்தினம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story