செங்கல்பட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: ரெயில் நிலைய மேற்கூரைகள் பறந்தன


செங்கல்பட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை: ரெயில் நிலைய மேற்கூரைகள் பறந்தன
x
தினத்தந்தி 11 May 2022 10:54 PM IST (Updated: 11 May 2022 10:54 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் ரெயில் நிலைய மேற்கூரைகள் காற்றில் பறந்தன. மின்சார துண்டிப்பால் மக்கள் அவதியுற்றனர்.

செங்கல்பட்டு,

செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயினால் மக்கள் அவதியுற்று வந்தனர். அசானி புயல் வங்க கடலில் தீவிரம் அடைந்ததையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சூறைக்காற்றும் வீசியதால் செங்கல்பட்டு, வல்லம், மேலைமையூர், ஆப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்தன.

அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக புலிப்பாக்கம், கொளவாய் ஏரி அருகேயுள்ள ரெயில்வே தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் நேற்று அதிகாலை தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன. ரெயில்வே ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பின்னர் ரெயில் சேவை தொடங்கியது.

சூறைகாற்றில் செங்கல்பட்டு ரெயில் நிலைய மேற்கூரைகள் காற்றில் பறந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை. செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் வழியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் பயணிகள் சிரமப்பட்டனர்.

ரெயில் நிலைய மேற்கூரை மற்றும் மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் மின்சார வயர்கள் மீது மரம் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் மின்வெட்டை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story