விழுப்புரம் அருகே பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு


விழுப்புரம் அருகே பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 11 May 2022 5:28 PM GMT (Updated: 11 May 2022 5:28 PM GMT)

விழுப்புரம் அருகே பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.


விழுப்புரம், 

விழுப்புரம் செஞ்சி சாலையில் அமைந்துள்ளது முட்டத்தூர் கிராமம். இங்குள்ள மலையில் விழுப்புரம் மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் முட்டத்தூர் இளைஞர்கள் களஆய்வு மேற்கொண்டனர். 

மலையில் சுமார் 2 ஆயிரம் அடி உயரத்தில் வழுவழுப்பான சமதளப்பாறை இருந்தது. அதற்கு அருகில் இருக்கும் பாறையில் சிவப்பு வண்ண ஓவியங்கள் இருப்பது கண்டறியப்பட்டன. 

“இந்த ஓவியத்தொகுப்பில் மனிதர்கள் குழுவாக இருக்கின்றனர். வேட்டை சமூகமாக இருந்தபோது விலங்குகளை எதிர்த்து போரிடுவதற்கான பயிற்சியை இவர்கள் மேற்கொள்கின்றனர். இதில் விலங்கின் உருவமும் இடம்பெற்றுள்ளது. 

இந்த ஓவியங்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்” என்று   மூத்த கல்வெட்டு ஆய்வாளரும் கீழ்வாலை பாறை ஓவியங்களை
 கண்டறிந்தவருமான அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.  மலையில் கண்டறியப்பட்டுள்ள பாறை ஓவியங்கள் வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்றன. 

தமிழர்களின் வரலாறு பண்பாட்டு சின்னமாக விளங்கும் முட்டத்தூர் பாறை ஓவியங்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்குட்டுவன் தெரிவித்தார். 

அப்போது முட்டத்தூர் கிராம வளர்ச்சி இளைஞர் சங்க நிர்வாகிகள் சூர்யகாந்த், சதீஷ், புரூஸ்லிமாறன், ராஜகுமாரன், கவுதம், ஆகாஷ், மாவட்ட வரலாறு பண்பாட்டு பேரவை விஷ்ணுபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story