புகழூர் நகராட்சி துப்புரவு பணியாளரை தாக்கிய 4 பேர் கைது
புகழூர் நகராட்சி துப்புரவு பணியாளரை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நொய்யல்,
நொய்யல் அருகே குந்தாணிபாளையம் பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் பூபாலன் (வயது 25). இவரும், பொன்னுசாமி என்பவரும் புகழூர் நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை பூபாலன் மற்றும் பொன்னுசாமி ஆகியோர் காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள காந்திநகர் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான பேட்டரி வண்டியை கொண்டு சென்று அங்கு நிறுத்திவிட்டு துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த ஹரிஹரன் (21), மதன் (23), சரவணன் (29), கவுதம் (21) ஆகிய 4 பேரும் பேட்டரி வாகனத்தின் மீது அமர்ந்து கொண்டு வாகனத்தை ஸ்டார்ட் செய்துள்ளனர்.
அதைப்பார்த்த பூபாலன் வண்டியை ஸ்டார்ட் செய்ய வேண்டாம் என அங்கிருந்து சத்தம் போட்டுக்கொண்டு ஓடி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து பூபாலனை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். பின்னர் பேட்டரி வண்டியை ஸ்டார்ட் செய்து பூபாலனின் வலது காலில் ஏற்றியுள்ளனர். இதனால் அவருக்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் பூபாலனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து படுகாயம் அடைந்த பூபாலன் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், ஹரிகரன், மதன், சரவணன், கவுதம் ஆகிய 4 பேர் மீது வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story