விராலிமலை அருகே 3 குளங்களில் மீன்பிடி திருவிழா
விராலிமலை அருகே 3 குளங்களில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது.
விராலிமலை:
மீன்பிடி திருவிழா
விராலிமலை அருகே முச்சந்தி குளம், காக்காகுடி குளம், பொருவாய் தவிடான் குளத்தில் இன்று மீன்பிடி திருவிழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அறுவடை காலம் முடிந்ததை ஒட்டியும், தற்போது இக்குளங்களில் தண்ணீர் வற்றியதாலும் மீன்பிடி திருவிழா நடத்துவது என ஊர் பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று மீன்பிடி திருவிழாவானது நடத்தப்பட்டது. இதில் கல்குடி, பொருவாய், காக்காக்குடி, குளவாய்ப்பட்டி, விட்டமாபட்டி, கோமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளானவர்கள் அதிகாலையிலேயே குளங்களில் குவிந்தனர்.
மீன்களை வீட்டுக்கு எடுத்து சென்றனர்
இதனையடுத்து கிராம முக்கியஸ்தர்கள் வெள்ளை துண்டு வீசியதை தொடர்ந்து குளத்தின் கரையில் தயாராக நின்ற பொதுமக்கள் தாங்கள் கொண்டுவந்த வலை, தூரி, கச்சா உள்ளிட்டவைகளை கொண்டு குளத்தில் மீன்களை பிடிக்க இறங்கினர். இதில் விரால், அயிரை, கெழுத்தி, வளனகெண்டை, குரவை உள்ளிட்ட மீன்களை பொதுமக்கள் பிடித்து சென்றனர். சில வலைகளில் பாம்புகளும் மாட்டியது. அதனை பொருட்படுத்தாமல் மீன்களை மட்டும் எடுத்துவிட்டு மீண்டும் மீன்களை பிடிப்பதற்கு குளத்துக்குள் இறங்கினர்.
சாதி, மத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக இறங்கி குளத்தில் பிடித்த மீன்களை விற்பனை செய்யாமல் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று சமைத்து சாப்பிட்டனர்.
Related Tags :
Next Story