அரியலூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 210 சாலை விபத்துகள்; 64 பேர் பலி
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 210 சாலை விபத்துகள் நடைபெற்று உள்ளன. இதில், 64 பேர் பலியாகி உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்து உள்ளார்.
அரியலூர்,
சாலை விபத்துகள்
அரியலூர் மாவட்டத்தில் போலீசார் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சிமெண்டு ஆலை கனரக வாகனங்கள் மற்றும் மற்ற கனரக வாகனங்களும் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே நகர்ப்புற மற்றும் ஊரக சாலைகளில் இயக்க அனுமதிக்கப்படுகின்றன. சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத, வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களில் அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 210 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
64 பேர் பலி
கனரக வாகனங்களால் ஏற்பட்ட 29 விபத்துகளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனங்களால் ஏற்பட்ட 112 விபத்துகளில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ், கார் மற்றும் இதர வாகனங்களால் ஏற்பட்ட 69 விபத்துகளில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து ஏற்படுத்தியவர் மீதும், வாகனத்தின் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலான விபத்துகள் அதிவேகம், அஜாக்கிரதை மற்றும் மது போதையில் பயணம் செய்வதால் நடைபெற்று உள்ளன.
இருசக்கர வாகன விபத்தில் உயிரிழப்பு அதிகம்
அரியலூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் தான் அதிக விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. சிமெண்டு ஆலை கனரக வாகனங்களால் தான் அதிக விபத்துகள் ஏற்படுகின்றன என்ற பதிவுகள் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படுகின்றன. இது உண்மைக்கு புறம்பான செய்தியாகும். போக்குவரத்து விதிமுறைகளை மீறும் கனரக வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட போலீசார் அரியலூரை “விபத்தில்லா மாவட்டமாக” மாற்றும் கனவை இலக்காகக் கொண்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார்கள். மேலும், பல்வேறு போக்குவரத்து விழிப்புணர்வுகள் தொடர்ச்சியாக மக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story