பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது;15 பவுன் நகை, மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
குமரி மாவட்டத்தில் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 15 பவுன் நகை மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.
ஆரல்வாய்மொழி,
குமரி மாவட்டத்தில் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 15 பவுன் நகை மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன.
பெண்களிடம் சங்கிலி பறிப்பு
ஆரல்வாய்மொழி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள ஓட்டலில் இருந்த ரத்னம் (வயது 65) என்பவர் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் பறித்து சென்றார். அதன்பிறகு கடந்த 4-ந் தேதி திருப்பதிசாரம் அருகே சண்முகா நகரில் லெட்சுமி (32) என்பவரின் 3 ½ பவுன் தங்க சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் பறித்துக்கொண்டு சென்று விட்டார்.
இந்த சம்பவங்கள் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குபதிவு செய்தனர். சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் மீனா, மற்றும் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் சங்கிலி பறிப்பு நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கைது
அப்போது கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவின் அடிப்படையில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக நாகர்கோவில் அருகே புத்தேரி பாரத் நகரை சேர்ந்த பிச்சை (30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது பட்டதாரியான பிச்சை குமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழி மற்றும் நாகர்கோவில் உள்ளிட்ட பல இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து பிச்சையை போலீசார் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் 15 பவுன் எடையுள்ள 4 தங்க சங்கிலிகள் மற்றும் சங்கிலி பறிப்புக்கு பயன்படுத்தியதாக 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டனர். நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
Related Tags :
Next Story