செயற்கை வர்ணம் பூசப்பட்ட 9 கிலோ ஷவர்மா பறிமுதல்


செயற்கை வர்ணம் பூசப்பட்ட 9 கிலோ ஷவர்மா பறிமுதல்
x
தினத்தந்தி 11 May 2022 6:50 PM GMT (Updated: 11 May 2022 6:50 PM GMT)

கள்ளக்குறிச்சியில் செயற்கை வர்ணம் பூசப்பட்ட 9 கிலோ ஷவர்மாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் நேற்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் சுகந்தன் தலைமையில் கள்ளக்குறிச்சி நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) கதிரவன் மற்றும் அலுவலர்கள் அன்புபழனி, இளங்கோவன் ஆகியோர் கொண்ட குழுவினர் கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் உள்ள ஓட்டல்கள், சாலையோர கடைகள், துரித உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது் 6 கடைகளில் விதிமுறைகளை மீறி சாலையோரத்தில் திறந்த நிலையில் தூசி படிந்த நிலையிலும், செயற்கை வர்ணம் பூசப்பட்ட நிலையில் 9 கிலோ சிக்கன் ஷவர்மா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 இதையடுத்து அந்த ஷவர்மாவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் தரமற்ற பிரியாணி மற்றும் சமைத்து குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த கெட்டுபோன 3 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். தொடர்ந்து அரசு விதிமுறைகளை பின்பற்றாத 5 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கப்பட்டது. 

நடவடிக்கை

மேலும் ஒரு கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் சுகந்தன் கூறுகையில், ஷவர்மா அடுப்பை தூசிகள் படியுமாறு சாலை ஓரத்தில் வைக்க கூடாது. ஷவர்மா நன்கு வேக வைத்த பின்னர் தான் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். மீதம் உள்ள ஷவர்மாவை மறுநாள் விற்பனை செய்யாமல் அதனை அழித்திட வேண்டும். இதனை மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Next Story