கஞ்சா கடத்திய 17 பேர் சொத்துகள் முடக்கம்
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 17 பேரின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 17 பேரின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கஞ்சா கடத்தல்
தென் மாவட்டங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களில் தொடர்புடைய நபர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தென் மண்டல ஐ.ஜி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கஞ்சா மற்றும் போதை பொருள் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அதன்படி, தேனியில் 84 கிலோ, மதுரையில் 322 கிலோ, திண்டுக்கல்லில் 220 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, அதில் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டள்ளனர். இந்த வழக்குகளில் தொடர்புடைய நபர்கள் மீது கிரிமினல் மற்றும் நிதி விசாரணையும் நடந்தது.
கணக்கெடுப்பு
அப்போது 17 பேர் சம்பாதித்த பணத்தின் மூலம் எங்கெல்லாம் அவர்களுக்கு சொத்து உள்ளது எனவும், அந்த சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, இந்த 17 பேரின் சொத்துகள், வங்கி கணக்கு விவரங்கள், வாகனங்கள், நிலங்கள், வருமான வரித்தாக்கல் விவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் சேரிக்கப்பட்டது. மேலும் இவர்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரின் அசையும், அசையா சொத்துகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டது. இதற்கு டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அந்த விவரங்கள் அனைத்தும் பகுதி நீதித்துறைக்கு சமர்பிக்கப்பட்டது. அவர்கள் அனைத்தையும் விசாரித்தனர். அதன் தொடர்ச்சியாக அந்த 17 பேரின் பணம், நிலம் உள்ளிட்டவைகள் முடக்கப்பட்டன.
இதுபோல், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு கைதாகும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முதல்முறையாக...
திண்டுக்கல் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் அசையும், அசையா சொத்துகள், வாகனங்கள், வங்கி இருப்பு தொகை, வரவு-செலவு ஆகியவற்றை சோதனை செய்ததில் ரூ.1 கோடியே 83 லட்சத்து 72 ஆயிரம், வங்கியில் உள்ள ரூ.10 லட்சத்து 10 ஆயிரம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் கைது செய்யப்பட்ட நபர்கள், உறவினர்கள் ஆகியோருக்கு சொந்தமான வங்கி கணக்கில் இருந்த ரூ.1.20 லட்சம், சுமார் ரூ.37 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்து, ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. இதுபோல், தேனியிலும் கைது செய்யப்பட்டவர்களின் உடமைகள் முடக்கப்பட்டுள்ளன. தென் தமிழகத்தில் கஞ்சா கடத்தியவர்களின் சொத்துகள் முடக்கப்படுவது இதுவே முதல்முறை.
கடைகளுக்கு சீல்
கஞ்சா வியாபாரிகள் மட்டுமல்லாது அவர்களின் உறவினர்கள் சொத்துகள் அனைத்தும் சட்டப்படி முடக்கப்படும். பள்ளியின் அருகில் போதை பொருள் விற்பனை செய்யும் கடை உரிமைமாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுவதுடன், கடைக்கும் சீல் வைக்கப்படும். தூத்துக்குடி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுபோன்று விற்பனை செய்த கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கஞ்சா எந்த மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படுகிறது, இதில் யாருக்குகெல்லாம் தொடர்பிருக்கிறது என்பது குறித்த முழு விசாரணையும் நடந்து வருகிறது. இந்த விசாரணையில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வரும், டி.ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி உடனிருந்தார்.
Related Tags :
Next Story