மீன்சுருட்டி அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை, சிலை திருட்டு; உண்டியல் உடைப்பு
மீன்சுருட்டி அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள் நகை, சிலை மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மீன்சுருட்டி,
மாரியம்மன் கோவில்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கீழசம்போடை கிராமத்தில் சிதம்பரம்- ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையின் அருகே மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக அதே கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 55) இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை 5 மணியளவில் வழக்கம்போல் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கருவறையில் உள்ள கிரில் கேட் மற்றும் கதவுகளில் உள்ள 2 பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.
நகை, சிலை திருட்டு
இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி உள்ளே சென்று பார்த்தார். அப்போது கருவறையில் உள்ள மாரியம்மனின் கழுத்தில் அணிந்திருந்த தாலி, தாலிகுண்டு, காசுகள் என மொத்தம் 28 கிராம் தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. மேலும் கோவில் உண்டியலை தூக்கி சென்ற மர்ம ஆசாமிகள் அருகே உள்ள வயலில் வைத்து உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தையும் அள்ளிச்சென்றது தெரியவந்தது.
இந்த கோவிலின் அருகே உள்ள நாதமுனிகள் பெருமாள் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் தாலியும், அங்கு வைக்கப்பட்டிருந்த ½ அடி உயரமுள்ள வெண்கல ஆழ்வார் சிலை ஒன்றும், பக்தர்கள் தலையில் வைக்கப்படும் கிரீடம், உண்டியலையும் மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.
மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மாரியம்மன் கோவிலில் இருந்து மண்மலை ஓடை வரை சென்று திரும்பி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மீன்சுருட்டி அருகே 2 கோவில்களின் பூட்டை உடைத்து பணம், நகை மற்றும் சிலை திருட்டு போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story