மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அ.தி.மு.க. -தி.மு.க. திடீர் மோதல்
மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தில் மேயரின் கணவர் தலையீடு இருப்பதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டினர்.
மதுரை
மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. மாநகராட்சி நிர்வாகத்தில் மேயரின் கணவர் தலையீடு இருப்பதாக அ.தி.மு.க.வினர் குற்றம்சாட்டினர்.
இருக்கை பிரச்சினை
மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று பகல் 11.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
கடந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வினர் தங்களுக்கு ஒரே பகுதியில் இருக்கை ஒதுக்க வில்லை என்று கூறி பிரச்சினை செய்தனர். அதே போல் இந்த பட்ஜெட் கூட்டத்திலும் அ.தி.மு.க.வினருக்கு ஒரே பகுதியில் இருக்கை ஒதுக்காமல் ஆங்காங்கே ஒதுக்கப்பட்டு இருந்தது. எனவே நேற்று முன்னதாக வந்த அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அனைவரும் ஒரே பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
11.10 மணியளவில் அங்கு வந்த தி.மு.க. கவுன்சிலர்கள், அ.தி.மு.க.வினரிடம் நீங்கள், உங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் போய் அமருங்கள், என்றனர். அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் அமர்ந்து இருந்தனர்.
வாக்குவாதம்
அதன்பின் இருக்கை தொடர்பாக அ.தி.மு.க..-தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேசிய சில தி.மு.க. கவுன்சிலர்கள், “நீங்கள் போய் மேயர் இருக்கையில் கூட அமருங்கள். ஆனால் நாங்கள் அமர வேண்டிய இருக்கையை விட்டு எழுந்து இருங்கள்”் என்றனர்.
தொடர்ந்து, அ.தி.மு.க. கவுன்சிலர்களை சுற்றி வளைத்த தி.மு.க. கவுன்சிலர்கள், ‘வெளியேறு, வெளியேறு’ என்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. அப்போது மைக் மூலம் பேசிய மாமன்ற செயலாளர், அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்தான் அமர வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேயர் கணவர்
அதனால் வேறு வழியின்றி அ.தி.மு.க. கவுன்சிலர்கள், சபையில் இருந்து வெளியேறி மேயர் இந்திராணியிடம் முறையிட அவரது அறைக்கு சென்றனர். அவர்களை பின் தொடர்ந்து பத்திரிகையாளர்களும் அங்கு சென்றனர். அப்போது பத்திரிகையாளர்களை உள்ளே வரவிடாமல் தடுக்க மேயரின் கணவர் பொன் வசந்த் மற்றும் சிலர் அந்த கதவை மூடினர்.
இதனால் கதவுக்கு வெளியே இருந்த பத்திரிகையாளர்கள், வீடியோ கிராபர்கள் கீழே விழுந்தனர். அதில் ஒருவருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பத்திரிகையாளர்கள், மேயரின் கணவர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களை மேயரின் கணவர் பொன்வசந்த் சமரசம் செய்தார். இந்த பிரச்சினை காரணமாக பட்ஜெட் கூட்டம் சுமார் 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக பகல் 12.40 மணிக்கு தொடங்கியது.
கூட்டம் தொடங்கியவுடன் மேயர், பத்திரிகையாளர்கள் மீதான சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பின் மேயர், இந்திராணி மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசினார்.
தனி அறை
இந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூறியதாவது:-
உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருக்கும் பெண்களின் கணவர் மற்றும் உறவினர்கள் நிர்வாகத்தில் தலையிட கூடாது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அந்த உத்தரவை மதுரையில் தி.மு.க.வினர்களே மீறுகின்றனர். நாங்கள் மேயரை அவரது அறையில் சந்திக்க சென்ற போது மேயரின் கணவர் பொன்.வசந்த், முன்னாள் கவுன்சிலர் குடைவீடு அருண்குமார் மற்றும் மேயரின் உறவினர்கள் எங்களை தடுத்ததால் மோதலானது. மதுரை மேயரின் கணவர், பொன்வசந்த மாநகராட்சி நிர்வாகத்தில் முழுமையாக தலையீடுகிறார். மக்கள் பிரச்சினை குறித்து தெரிவிக்க மேயருக்கு போன் செய்தால் மேயரின் கணவர்தான் எப்போதும் போனை எடுக்கிறார். தி.மு.க. கவுன்சிலர்கள் கூட மேயரை சந்திக்க முடிவதில்லை. மாநகராட்சியில் மேயரின் அறைக்கு உள்ளே ஒரு தனி அறை உள்ளது. அந்த அறையில் அமர்ந்து தான் மேயரின் கணவர் மாநகராட்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். மாநகராட்சியில் டெண்டர் யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதனை மேயரின் கணவர்தான் முடிவு செய்கிறார்.
மாநகராட்சி வெளியிட்ட பட்ஜெட் புத்தகத்தில் மாநகராட்சியின் வருமானம் ரூ.1,251 கோடியே 9 லட்சத்து 46 ஆயிரம் என்றும், செலவு ரூ.1,251 கோடியே 77 லட்சத்து 19 ஆயிரம் என்றும் ஆக மொத்தம் பற்றாக்குறை ரூ.67 லட்சத்து 44 ஆயிரம் என்று இருந்தது. ஆனால் மேயர் வாசித்த பட்ஜெட் உரையில் வருமானம் ரூ.1,259 கோடியே 10 லட்சம் என்றும், செலவு ரூ.1,251 கோடியே 77 லட்சம் என்றும் கூறுகிறார். இந்த உரையின்படி ரூ.7.33 கோடி உபரி பட்ஜெட் ஆகும். அதில் எதனை எடுத்து கொள்வது? தான் தாக்கல் செய்ததது உபரி பட்ஜெட்டா அல்லது பற்றாக்குறை பட்ஜெட்டா என்று கூற மேயருக்கு தெரியவில்லை. தவறாக எழுதி கொடுத்ததை அப்படியே வாசித்து விட்டார். எனவே முதல்-அமைச்சர் ஸ்டாலின், மதுரை மாநகராட்சியில் மேயர் சுயமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story