கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதல்; தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு


கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதல்; தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 12 May 2022 1:18 AM IST (Updated: 12 May 2022 1:18 AM IST)
t-max-icont-min-icon

சிறுகனூர் அருகே சாலையோரத்தில் நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதியதால் இரு லாரிகளும் தீப்பற்றி எரிந்தன.

சமயபுரம், மே.12-
சிறுகனூர் அருகே சாலையோரத்தில் நின்ற கன்டெய்னர் லாரி மீது மற்றொரு லாரி மோதியதால் இரு லாரிகளும் தீப்பற்றி எரிந்தன. தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டதால் அருகே உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் தீயில் இருந்து தப்பியது.
கன்டெய்னர் லாரி
சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு மின்சாதன பொருட்கள் மற்றும் இதரபொருட்களைஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை தூத்துக்குடி அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்த தெய்வேந்திரன் (வயது 55) என்பவர் ஓட்டி வந்தார்.
நேற்று அதிகாலையில் அந்த லாரி சிறுகனூர் வந்தது. இதனையடுத்து டிரைவர் தெய்வேந்திரன் லாரியை  திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே சாலையோரத்தில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நிறுத்தி இருந்தார்.
தீப்பற்றி எரிந்தன
பின்னர் சிறிது நேரம் கழித்து லாரியை இயக்குவதற்கு ஏறி அமர்ந்தபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி எதிர்பாராதவிதமாக கன்டெய்னர் லாரி மீது மோதியதில் இரு லாரிகளும் தீப்பற்றி எரிந்தன.
இதனால் அதிர்ச்சி அடைந்த தெய்வேந்திரன் கன்டெய்னர் லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பினார். அதேபோல் மற்றொரு லாரி டிரைவரும் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிச்சாமி (பொறுப்பு) தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
அசம்பாவித சம்பவங்கள் தவிர்ப்பு
விபத்து நடைபெற்ற இடத்தின் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த விபத்தில் கன்டெய்னர் லாரியில் இருந்த சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. சம்பவ இடத்தை மாவட்ட தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் கருணாகரன் நேரில் வந்து  பார்வையிட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில்  சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்டெய்னர் லாரி மீது மோதி விட்டு தப்பி ஓடிய மற்றொரு லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Next Story