முக்கூடல் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் புதிய உறைகிணறு அமைக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தல்
முக்கூடல் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் புதிய உறைகிணறு அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
முக்கூடல்:
சேதமடைந்த உறைகிணறு
நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஏராளமான உறைகிணறுகள் அமைக்கப்பட்டு, முக்கூடல், பாப்பாக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இதில் முக்கூடல் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்ட உறைகிணறு பல ஆண்டுகளாக சேதமடைந்து, அவற்றில் ராட்சத துவாரங்கள் விழுந்த நிலையில் உள்ளன. இதனால் ஆற்று தண்ணீரில் இழுத்து வரப்படும் குப்பைகள், இறந்த வனவிலங்குகளின் உடல்கள் போன்றவை நேரடியாக உறைகிணறுக்குள் விழுவதால், பொதுமக்களுக்கு அசுத்தமான குடிநீரையே வினியோகம் செய்யும் நிலை உள்ளது.
இதுகுறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து உறைகிணற்றில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து அடைத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
சுத்தமான குடிநீர் வினியோகிக்க...
முக்கூடல் நகருக்கு குடிநீர் வினியோகம் செய்யும் உறைகிணற்றில் பல ஆண்டுகளாக பெரிய துவாரங்கள் உள்ளன. அவற்றை ஆண்டுதோறும் தற்காலிகமாக மணல் மூட்டைகளால் அடுக்கி சீரமைத்தாலும், ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும்போது மணல் மூட்டைகள் சேதமடைகின்றன.
இதனால் சுகாதாரமற்ற குடிநீரை வினியோகிக்கும் நிலையே உள்ளது. எனவே முக்கூடல் ஆற்றுப்படுகையில் புதிய உறைகிணறு அமைத்து, சுத்தமான குடிநீர் வினியோகம் செய்வதற்கு அரசு உரிய நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story