கும்பகோணம் அரசலாற்றில் கொட்டப்படும் குப்பைகள்


கும்பகோணம் அரசலாற்றில் கொட்டப்படும் குப்பைகள்
x
தினத்தந்தி 11 May 2022 8:12 PM GMT (Updated: 11 May 2022 8:12 PM GMT)

கும்பகோணம் அரசலாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதால் விளைநிலங்கள் பாழாகும் அவலம் தடுக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கும்பகோணம்:
கும்பகோணம் அரசலாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதால் விளைநிலங்கள் பாழாகும் அவலம் தடுக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் திகழ்கின்றன. இங்கு ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போக சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதுதவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். மேலும் வாழை, உளுந்து, எள், நிலக்கடலை, தென்னை உள்ளிட்ட பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 75 சதவீத விவசாயிகள் ஆற்றுப்பாசனம் மூலமாகவே சாகுபடி செய்து வருகின்றனர். மிக குறைந்த எண்ணிக்கையில் மோட்டார் பம்பு செட்டுகள் மூலம் பாசனம் நடக்கிறது. குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
அரசலாறு
இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது. இதையொட்டி டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால் ஆகியவற்றை தூர்வாரும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் இருந்து வரக்கூடிய காவிரி ஆறு தஞ்சை மாவட்ட எல்லையான கல்லணையை வந்தடைந்தவுடன் அங்கிருந்து வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், காவிரி, கொள்ளிடம் என பிரிகிறது. இந்த ஆறுகளில் இருந்தும் வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி ஆறு என பல்வேறு கிளை ஆறுகள் பிரிந்து செல்கின்றன.. காவிரி ஆறு தஞ்சை மாவட்டத்திற்குள் நுழையும்போது 5 கிளைகளாக பிரிகிறது. இவற்றில் ஒன்று அரசலாறு ஆகும்.
கொட்டப்படும் குப்பைகள்
கும்பகோணம் அருகே உள்ள சாக்கோட்டையில் தொடங்கி கும்பகோணம் வழியாக பயணித்து புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வரை அரசலாறு செல்கிறது. இந்த ஆறு மூலம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் குடிநீர் ஆதாரமாக நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் இந்த தண்ணீர் பயன்பட்டு வருகிறது.
புனித நதியாக பாவிக்கப்பட்டு வரும் இந்த அரசலாறு தனது புனித தன்மையை இழந்து வருகிறது. பல இடங்களில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது. 
பழுதடைந்த பாலம்
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் செல்லக்கூடிய அரசலாற்றில் படித்துறைகள் உள்ளன. இந்த படித்துறைக்கு பொதுமக்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் செடி, கொடிகள் வளர்ந்து அந்த படித்துறை இருந்த சுவடே தெரியாத அளவுக்கு மாறி வருகிறது. மேலும் குப்பைகள் ஏராளமாக இரு கரையோரங்களில் கொட்டப்பட்டுள்ளன. மேலும் ஆற்றில் செடிகளும் வளர்ந்து காணப்படுகிறது. இந்த அரசலாற்றின் குறுக்கே உள்ள பாலங்களிலும் செடிகள் வளர்ந்து, பழுதடைந்த நிலையில் உள்ளன.
இந்த பாலத்தின் வழியாக தஞ்சை-கும்பகோணத்திற்கு இடையே இயங்கக்கூடிய அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த பாலத்தின் தடுப்புச்சுவர் வலுவிழந்து உள்ளது. சில இடங்களில் விரிசலும், ஓரிரு இடங்களில் காரை பெயர்ந்தும் உள்ளன. மற்றொரு பாலத்தின் வழியாக மக்கள் நடந்து செல்கின்றனர். இருசக்கர வாகனங்களும் சென்று வருகின்றன. இந்த பாலத்தில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது.
எதிர்பார்ப்பு
எனவே அரசலாற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அள்ளுவதுடன் இனிமேல் யாரும் குப்பைகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசலாற்று பாலத்தை சீரமைக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், விவசாயிகளும் எதிர்பார்க்கின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறும்போது, அரசலாற்றில் குப்பைகள் கொட்டப்படுவதால் தண்ணீர் வரும்போது குப்பைகளும் மிதந்து வந்து விளைநிலங்களுக்கு வந்து விடுகிறது. இவற்றில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் இருப்பதால் இவைகள் விளைநிலத்தை பாழக்கும். 
எனவே அரசலாறு உள்பட நீர்நிலைகளில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாலத்தை சீரமைப்பதுடன் அரசலாற்றை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story