சேலத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த கண்காட்சி கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்


சேலத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த கண்காட்சி கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 11 May 2022 8:28 PM GMT (Updated: 2022-05-12T01:58:20+05:30)

சேலத்தில் தமிழக அரசின் சாதனைகள் குறித்த பணி விளக்க முகாம் மற்றும் கண்காட்சியை கலெக்டர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

சேலம்,
கண்காட்சி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஒரு ஆண்டு நிறைவடைந்ததையொட்டி, சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில், செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த பல்துறை பணி விளக்க முகாம் மற்றும் கண்காட்சி தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமசந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி கண்காட்சியை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறும் போது ‘ஓயா உழைப்பின் ஓராண்டு - கடைகோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி' என்ற தலைப்பில் தமிழக அரசால் சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை, பார்வையிழப்பு தடுப்பு சங்கம், தொழில் மையம், கூட்டுறவுத்துறை, மகளிர் திட்டம், சமூக நலத்துறை, இ-சேவை மையம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, கால்நடை பராமரிப்புத்துறை, ஆவின், மீன்வளத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வேளாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன என்றார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து மாநில அளவில் நடைபெற்ற பயிர் மகசூல் போட்டியில் நிலக்கடலை, துவரை அதிகம் விளைவித்தமைக்காக முதல் பரிசாக சேலத்தை சேர்ந்த விவசாயிகள் ஜோதி மற்றும் கணேசன், கரும்பு, பச்சைபயிறு அதிகம் விளைவித்தமைக்காக 2-ம் பரிசாக விவசாயிகள் தனபால், குப்புசாமி ஆகியோருக்கும் மொத்தம் ரூ.65 ஆயிரம் பரிசு வழங்கினார். நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் பனமரத்துப்பட்டியை சேர்ந்த விவசாயி பாஸ்கரனுக்கு ரூ.89 ஆயிரத்து 680 மானிய தொகை வழங்கப்பட்டது.
அதேபோன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.5 ஆயிரத்து 500 மதிப்பில் 2 பேருக்கு நவீன காதொலிக்கருவி, ரூ.1 லட்சம் மதிப்பில் ஒருவருக்கு பேட்டரியால் இயங்கும் அதிநவீன சக்கர நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

Next Story