தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 11 May 2022 8:28 PM GMT (Updated: 11 May 2022 8:28 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மழைநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் மேல்மகன் தெருவில் மழைநீர் செல்ல கால்வாய் உள்ளது. அந்த கால்வாய் தூர்வாரப்படாததால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் மழைநீர் கால்வயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முபாரக், காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி.
===
அடிப்படை வசதிகள் வேண்டும்
தர்மபுரி மாவட்டம் சவுளுபட்டி கிராமம் வாரியார் பள்ளி எதிர் தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடுபங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் குடிநீர், சாக்கடை கால்வாய், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் அந்த பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
-முனியப்பன், சவுளுபட்டி, தர்மபுரி
====
ஆபத்தான குடிநீர்தொட்டி 
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை அடுத்த வரதராஜபுரம் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விடும் நிலையில் உள்ளது. இதனை அகற்றி புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டி பலமுறை மனு கொடுத்தும் பயன் இல்லை. அந்த குடிநீர் தொட்டியின் அருகில் கிராம நிர்வாக அலுவலகம்,  ஊராட்சி மன்ற அலுவலகம், ரேஷன் கடை, தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. பொதுமக்கள் நலன் கருதி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும்.
-பெ.காா்த்திகேயன், வரதராஜபுரம், நாமக்கல்.
===
சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்
நாமக்கல் முதலைப்பட்டி பைபாஸ் சாலையையொட்டி சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலை நேரங்களில் நடைபயிற்சி செல்வது வழக்கம். ஆனால் சிலர் சாலையோரம் குப்பைகள் மற்றும் கோழிகழிவுகளை கொட்டுவதால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் நடைபயிற்சி செல்பவர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலையோரம் உள்ள குப்பைகளை அகற்றி, மீண்டும் அங்கு குப்பைகள் கொட்டாமல் தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜா, முதலைப்பட்டி, நாமக்கல்.
====
இசேவை மையம் செயல்படுமா?
நாமக்கல் மாவட்டம் எருமபட்டி அடுத்த பொட்டிரெட்டிப்பட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் இ சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இது கடந்த 5 மாதங்களாக செயல்படாமல் இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இ சேவை மையம் தொடர்ந்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணா, பொட்டிரெட்டிப்பட்டி, நாமக்கல்.
===
பயன்படாத குடிநீர்தொட்டி
சேலம் மாநகராட்சி 33-வது வார்டு காளியம்மன் கோவில் 1-வது தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டி சேதமடைந்து மின் இணைப்பு இல்லாமல் பயன்பாடு இல்லாமல் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் போதிய குடிநீர் இல்லாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து மின் மோட்டாரை சரி செய்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
-தண்டபானி, பொன்னம்மாபேட்டை, சேலம்.
===
பராமரிப்பு இல்லாத வீடுகள்
சேலம் மாவட்டம் வீரபாண்டி அடுத்த பெருமாம்பட்டி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்திரா குடியிருப்பு தொகுப்பு வீடுகள் உள்ளன. அந்த வீடுகள் அனைத்தும் சேதமடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வீடுகளை பராமரித்து தர முன் வர வேண்டும்.
-சோமு, பெருமாம்பட்டி,சேலம்.
===
குடிநீர் வீணாகிறது
சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி 6-வது வார்டு ஆதிதிராவிடர் தெருவில் மின் மோட்டாருடன் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் குழாய்க்கு தொட்டி அமைக்காமல் பயன்படுத்துவதால் குடிநீர் அதிகமாக வீணாகிறது. மேலும் அங்கு மின்மோட்டார் அறை திறந்தே இருப்பதால் சிறுவர்கள் விளையாடும் போது ஏதேனும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-யுரேனஸ், பள்ளப்பட்டி, சேலம்.

Next Story