அ.தி.மு.க. பிரமுகர் மகன் உள்பட 4 பேர் கைது
தஞ்சையில், ஆடிட்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர்் மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில், ஆடிட்டர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் அ.தி.மு.க. பிரமுகர்் மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆடிட்டர் வெட்டிக்கொலை
தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 45). ஆடிட்டர். இவருடைய வீட்டுக்கு அருகில் 100 மீட்டர் தொலைவில் பண்ணை உள்ளது. அங்கு ஆடு, கோழி, தென்னை மரங்கள் போன்றவற்றை இவர் வளர்த்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பண்ணையில் இருந்த மகேஸ்வரனை 4 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்ட, அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதை அறிந்த மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
பின்னர் மகேஸ்வரன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மகேஸ்வரன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலை நடந்த பண்ணைக்கு போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா நேரில் சென்று பண்ணையில் பணிபுரிந்து வரும் பெண்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
4 பேர் கைது
மேலும் அவர், கொலையாளிகளை பிடிக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கழிவறையை ஏலம் எடுத்தது தொடர்பாக மகேஸ்வரன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து இந்த கொலை தொடர்பாக தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் கார்த்தி(32), செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன்(29), அரிகாரத்தெருவை சேர்ந்த குமரேசன்(27), ஆனந்தம் நகரைச் சேர்ந்த அரவிந்த்(26) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரபரப்பு தகவல்கள்
கைதானவர்களிடம் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-
கரந்தை சேர்வைக்காரன் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான குளியல் மற்றும் கழிவறை கட்டிடம் உள்ளது. இதை கடந்த சில ஆண்டுகளாக கார்த்தி ஏலம் எடுத்து நடத்தி வந்தார். ஆனால் முறையாக குளியல், கழிவறை கட்டிடம் செயல்படவில்லை. இந்த கட்டிடத்தை சுற்றி முட்புதர்கள் வளர்ந்து காணப்பட்டன. இந்த கட்டிடத்தின் வழியாக தான் வடவாற்றுக்கு மக்கள் சென்று வருவார்கள். இதனால் முட்புதர்களை அகற்றி, இந்த கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
ஏலம் எடுத்ததில் தகராறு
இந்தநிலையில் கடந்த ஆண்டு நடந்த ஏலத்தின்போது குளியல் மற்றும் கழிவறை கட்டிடத்தை மகேஸ்வரன் ஏலம் எடுத்தார். அதன்பிறகு முட்புதர்களை அகற்றி அந்த கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். ஏலம் எடுத்தது தொடர்பாக கார்த்தி, மகேஸ்வரன் இடையே தகராறு ஏற்பட்டது. தன்னிடம் கழிவறை, குளியல் அறையை கொடுத்துவிடும்படி கார்த்தி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
மேலும் கார்த்தியின் சொந்த வீடு இருப்பது புறம்போக்கு இடம் எனவும் அதை அகற்ற வேண்டும் எனவும் புகார் சென்றது. இது தொடர்பாகவும் மகேஸ்வரன், கார்த்தி இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த முன்விரோதம் காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது.
மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான கார்த்தியின் தாய் ருக்மணி அ.தி.மு.க. வார்டு பிரதிநிதியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story