‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 11 May 2022 9:03 PM GMT (Updated: 11 May 2022 9:03 PM GMT)

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

 ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?
கோபி நகர் பகுதியில் கீரிப்பள்ளம் ஓடை செல்கிறது. கோபி- சத்தியமங்கலம் மெயின் ரோட்டில் கீரிப்பள்ளம் ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் கீழ் பகுதியில் ஆகாயத்தாமரைகள், செடி, கொடிகள் அதிகமாக வளர்ந்து உள்ளது. இதனால் கீரிப்பள்ளம் ஓடையில் கழிவுநீர் செல்வதற்கு தடை ஏற்பட்டு உள்ளது. இதன்காரணமாக ஒரே இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே ஓடையை ஆக்கிரமித்து உள்ள ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பொதுமக்கள், கோபி.



சாக்கடை வசதி இல்லை
ஈரோடு சோலாரில் புது பஸ்நிலையம் கட்டப்பட்டு வரும் நகராட்சி நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் இங்கு முறையான சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வாசல்களில் தேங்கி நிற்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, சுற்றுப்புற சுகாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சோலார் நகராட்சி நகரில் சாக்கடை வசதி அமைத்துதர ஆவன செய்வார்களா?
பொதுமக்கள், சோலார்.

பாலம் பணி தொடங்கப்படுமா?
பர்கூர் மலைப்பகுதியில் உள்ள ஈரெட்டி, தேவர்மலையில் 2 ஓடைகள் செல்கின்றன. இந்த ஓடைகளின் குறுக்கே தரைப்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தரைப்பாலங்களின் மீது தண்ணீர் செல்கிறது. இதனால் தரைப்பாலம் உள்ள இடத்தில் உயர்மட்ட பாலம் கட்ட அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக தொடங்கப்பட்ட பணிகள் பாதியில் நிற்கிறது. தற்போது விட்டு விட்டு மழை பெய்வதால் அந்த வழியாக பஸ்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே மலை கிராம மக்களின் தேவையை உணர்ந்து அதிகாரிகள் உடனே உயர்மட்ட பாலம் கட்டும் பணியை தொடங்க வேண்டும்.
பொதுமக்கள், தேவர்மலை. 

மின்விளக்கு ஔிரவில்லை
ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி குடியிருப்பு பகுதி 2-ல் பாதாள சாக்கடை தொட்டி உள்ள பகுதியில் தெருவிளக்கு 4 நாட்களாக ஒளிரவில்லை. இருள் சூழ்ந்து இருப்பதால் இரவு நேரங்களில் முதியவர்களும், பெண்களும் நடமாட அச்சப்படுகிறார்கள். எனவே மின்வாரிய பணியாளர்கள் உடனே ஒளிராத மின்விளக்கை ஒளிரச்செய்யவேண்டும்.
பொதுமக்கள், முத்தம்பாளையம். 

உடைந்த சாக்கடை
ஈரோடு பெரியவலசு நேதாஜி நகரில் சாக்கடை கால்வாய் உடைந்து கிடக்கிறது. இதனால் மழை நீருடன் சாக்கடை நீர் கலந்து ரோட்டில் ஓடுகிறது. இதன்காரணமாக நடந்து செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். மேலும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே உடைந்த சாக்கடை கால்வாயை சீரமைக்க சம்பந்தப்பட்டத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளங்கோ, ஈரோடு.

குவிந்து கிடக்கும் குப்பை
ஈரோடு முனிசிபல் காலனியில் இருந்து நசியனூர் செல்லும் ரோட்டில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக நடந்து செல்வோர்கள் முகம் சுழிக்கிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் ரோட்டின் ஓரத்தில் குவிந்து கிடக்கும் குப்பையை அகற்ற ஆவன செய்வார்களா?
பொதுமக்கள். முனிசிபல் காலனி. ஈரோடு. 

Next Story