சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் தம்பி கைது; அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் தம்பி கைது; அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 May 2022 2:47 AM IST (Updated: 12 May 2022 2:47 AM IST)
t-max-icont-min-icon

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் தம்பியை போலீசார் கைது செய்த அவமானத்தால் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஹாசனில் நடந்துள்ளது.

ஹாசன்:

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு

  கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவ்வழக்கில் பா.ஜனதா பிரமுகர் திவ்யா, அவரது கணவர், போலீஸ் அதிகாரிகள் என இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  கைதானவர்களில் ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகா குந்தேவு கிராமத்தைச் சேர்ந்த மனுகுமார் என்பவரும் ஒருவர். இவர் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 50-வது இடம் பிடித்து வெற்றி பெற்றிருந்தார்.

சி.ஐ.டி. போலீசார் சோதனை

  இதனால் மனுகுமாரிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முறைகேட்டில் ஈடுபட்டு தேர்வு எழுதியது தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மனுகுமாரின் வீடு, அவரது அண்ணன் வாசுவின் வீடு மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர். இதனால் வாசு(வயது 36) அவமானம் தாங்காமல் மனமுடைந்து காணப்பட்டார். அவர் தனது தம்பியின் வேலைக்காக ரூ.10 லட்சம் கடன் வாங்கி கொடுத்திருந்தார். தற்போது தம்பிக்கு வேலை கிடைக்காததாலும், அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டதாலும் மிகவும் நொந்து போனார்.

  அவர் ஒலேநரசிப்புராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த பிரச்சினை காரணமாக அவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என்று தெரிகிறது.

சோகம்

  இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அவரது மனைவி பல்லவி ஒலேநரசிப்புரா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில் தம்பியை போலீசார் கைது செய்ததால் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story