சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலம்
சேலம் அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவையொட்டி நேற்று பக்தர்கள் அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.
சேலம்,
சித்திரை திருவிழா
சேலம் அஸ்தம்பட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது.
இதையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. கடந்த 3-ந் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சி, 6-ந் தேதி அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. நேற்று முன்தினம் காலை மத்திய சிறைச்சாலை பின்புறம் பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
அலகு குத்தி ஊர்வலம்
இந்தநிலையில், நேற்று காலை கோவிலில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து மதியம் பெரியபுதூர், எம்.டி.எஸ். நகர், மணக்காடு உள்பட பல்வேறு இடங்களில் இருந்து அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் ஊர்வலமாக வந்தனர். ஒருசில பக்தர்கள் விமான அலகு குத்தி அந்தரத்தில் தொங்கியவாறு கோவிலுக்கு வந்தனர்.
இதையொட்டி அஸ்தம்பட்டி பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் மாலை 5 மணிக்கு பக்தர்கள் அக்னி கரகம், பூங்கரம் எடுத்து கோவிலுக்கு வந்தனர். மேலும், கோவிலில் கஜகவுரி, சாமுண்டீஸ்வரி, வைஷ்ணவி, மோகினி ஆகிய சாமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதை பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
சத்தாபரணம்
திருவிழாவையொட்டி இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு மாறுவேட நிகழ்ச்சியும், நாளை (வெள்ளிக்கிழமை) காலை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சத்தாபரணம் நிகழ்ச்சியும், 14-ந் தேதி காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, மதியம் 2 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story