கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது
கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், எசனை அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் நேற்று அதிகாலை 2 மர்ம ஆசாமிகள் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் கோவிலின் வெளியே யாரும் வருகிறார்களா என்று பார்த்து கொண்டிருக்க, மற்றொருவர் கோவில் முன்பு இருந்த சூலாயுதத்தை பிடுங்கி, கோவிலின் முன்பக்க பூட்டை உடைத்து, உள்ளே சென்று உண்டியலை உடைத்து கொண்டிருந்தார். இதனைக்கண்ட கிராம மக்கள் திருடன், திருடன் என்று சத்தம் போட்டதால், திருடுவதற்கு காவல் காத்து கொண்டிருந்த மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பியோடினார்.
இதையடுத்து பொதுமக்கள் உண்டியலை உடைத்து கொண்டிருந்த மர்ம ஆசாமியை கையும், களவுமாக பிடித்து பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் குரும்பலூர் தோப்பு தெருவை சேர்ந்த சின்னமுத்து மகன் பால்ராஜ் (வயது 22) என்பதும், அவருடன் வந்திருந்து தப்பியோடியவர் அதே பகுதியை சேர்ந்த மூக்கன் மகன் மணிகண்டன் (25) என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேரும் முன்னதாக எசனையில் திறந்தவெளியில் உள்ள பெரியாண்டவர் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாகி இருந்த மணிகண்டனை போலீசார் பிடித்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்ராஜ், மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story