தமிழக இளம்பெண் கொலை வழக்கில் தம்பதி உள்பட 4 பேர் கைது


தமிழக இளம்பெண் கொலை வழக்கில் தம்பதி உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 9:31 PM GMT (Updated: 2022-05-12T03:01:49+05:30)

பெங்களூருவில் தமிழக இளம்பெண் கொலை வழக்கில் தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோட்டார் சைக்கிளில் உடலை கொண்டு சென்ற போது கவிழ்ந்ததால் போலீசாரிடம் அவர்கள் சிக்கினர்.

பெங்களூரு:

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது

  ராமநகர் மாவட்டம் டவுன், பெங்களூரு-மைசூரு ரோட்டில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் கவிழ்ந்தது. இதனால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 வாலிபர்களுக்கும் காயம் ஏற்பட்டது. அதே நேரத்தில் அவர்களுக்கு அருகில் ஒரு இளம்பெண் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

  இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், ராமநகர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி விசாாித்தனர். மேலும் 2 வாலிபா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக இளம்பெண் கொலை

  அதாவது பெங்களூரு ராஜராஜேசுவரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரகு-துர்கா தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த சவுமியா(வயது 22) என்பவர் வசித்து வந்தார். சவுமியாவுக்கும், துர்காவுக்கும் இடையே பணப்பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே சவுமியா வீட்டில் இருந்து சென்று விட்டார். பின்னர் சில நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்த சவுமியாவுக்கும், துர்காவுக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது.

  அப்போது ஆத்திரமடைந்த துர்கா வீட்டில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து சவுமியாவை கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த சவுமியா இறந்து விட்டாா். இதுபற்றி தனது கணவர் ரகுவுக்கும், சகோதரர் நாகராஜிக்கும் துர்கா தகவல் தெரிவித்துள்ளார். உடனே சவுமியாவின் உடலை மண்டியா மாவட்டத்திற்கு கொண்டு சென்று, அங்கு வீசி விடலாம் என்று 3 பேரும் திட்டமிட்டுள்ளனர்.

4 பேர் கைது

  பின்னர் நாகராஜ் தனது நண்பர் வினோத்தி்டம் உதவி கேட்டுள்ளார். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சவுமியாவின் உடலை நாகராஜும், வினோத்தும் மோட்டார் சைக்கிளில் மண்டியாவுக்கு எடுத்து சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் போது தான் ராமநகர் மாவட்டத்தில் வைத்து மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததால், சவுமியா கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

  இதையடுத்து, நாகராஜ், வினோத்தை ராமநகர் டவுன் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் ரகு, துர்காவையும் போலீசார் கைது செய்துள்ளனர். துர்காவுக்கும், சவுமியாவுக்கும் இடையே இருந்த பணப்பிரச்சினையில் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கைதான 4 பேர் மீதும் ராமநகர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story