நடுரோட்டில் வங்கி பெண் ஊழியர் படுகொலை; கணவர் விஷம் குடித்து தற்கொலை


நடுரோட்டில் வங்கி பெண் ஊழியர் படுகொலை; கணவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 12 May 2022 3:04 AM IST (Updated: 12 May 2022 3:04 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நடத்தையில் சந்தேகப்பட்டு வங்கி பெண் ஊழியரை நடுரோட்டில் கணவர் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். மேலும் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு:

வங்கி பெண் ஊழியர்

பெங்களூரு சுத்தகுண்டே பாளையா பகுதியில் வசித்து வந்தவர் வெங்கடசாமி(வயது 38). இவரது மனைவி சுகன்யா(27). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வங்கி ஒன்றில் ஊழியராக சுகன்யா வேலை செய்து வந்தார். வெங்கடசாமி ஆட்டோ டிரைவர் ஆவார். இந்த நிலையில், சுகன்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவருடன் வெங்கடசாமி அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது.

இதற்கிடையில் சம்பவத்தன்று வங்கிக்கு வேலைக்கு சென்று விட்டு சுகன்யா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பி.டி.எம். லே-அவுட் முதலாவது ஸ்டேஜ் பகுதியில் வரும்போது சுகன்யாவை வழிமறித்து, வெங்கடசாமி தகராறு செய்தார். மேலும் கத்தியால் அவரை சரமாரியாக வெங்கடசாமி குத்தினார். இதில் சுகன்யா பலத்த கத்திக்குத்து காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் வலியால் துடித்தார்.

தற்கொலை

  இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் வெங்கடசாமியை மடக்கி பிடித்தார்கள். அப்போது தான் விஷம் குடித்திருப்பதாக வெங்கடசாமி தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் இதுபற்றி சுத்தகுண்டே பாளையா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் வெங்கடசாமியையும், அவரது மனைவி சுகன்யாவையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

  அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெங்கடசாமியும், சுகன்யாவும் இறந்து விட்டார்கள். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கொன்றதுடன், வெங்கடசாமியும் தற்கொலை செய்தது தெரியவந்தது.

அனாதையான குழந்தைகள்

  இதுகுறித்து சுத்தகுண்டே பாளையா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியை கொன்றுவிட்டு வெங்கடசாமி தற்கொலை செய்து கொண்டதால் அவர்களது 2 குழந்தைகளும் அனாதையாகி உள்ளனர். அவர்களை சுகன்யாவின் குடும்பத்தினர் மீட்டு தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story