பெலகாவியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா; பசவராஜ் பொம்மை தகவல்


பெலகாவியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா; பசவராஜ் பொம்மை தகவல்
x
தினத்தந்தி 11 May 2022 9:36 PM GMT (Updated: 11 May 2022 9:36 PM GMT)

பெலகாவியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

பெங்களூரு:

ராஜ்நாத்சிங்குடன் சந்திப்பு

  ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங்கை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  பெலகாவியில் 700 ஏக்கர் நிலம் ராணுவத்துறைக்கு சொந்தமாக உள்ளது. அது கர்நாடக அரசின் நிலம். அந்த நிலத்தை கர்நாடக அரசுக்கே வழங்குமாறு ராஜ்நாத்சிங்கிடம் கேட்டுள்ளேன். அவர் சாதகமான பதிலை கூறியுள்ளார். அந்த நிலத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் திட்டம் உள்ளது. இது தொடர்பாக ஒரு ஆய்வு அறிக்கையை தயாரித்து வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும். அந்த அறிக்கை அடிப்படையில் தொழில்நுட்ப பூங்கா அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

  சங்கொள்ளி ராயண்ணா பெயரில் ராணுவ பள்ளியை அரசு அமைத்துள்ளது. அந்த பள்ளியின் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு ராஜ்நாத்சிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் விழாவில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார்.

கரீப் பருவத்திற்கு...

  மத்திய சுகாதாரம், உரம் மற்றும் ரசாயனத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவை நேரில் சந்தித்து பேசினேன். கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய உரம் குறித்து பேசினேன். கரீப் பருவத்திற்கு தேவையான டி.ஏ.பி. உரம் மற்றும் யூரியா குறித்து அவரிடம் எடுத்து கூறினேன். ஆனால் அம்மோனியா உள்பட பிற உரங்கள் கிடைப்பது சந்தேகம்.

  ஏனென்றால் சர்வதேச சந்தையில் அந்த உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டி.ஏ.பி. உரம் போதுமான அளவுக்கு வழங்குவதாக மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார். அந்த உரம் மங்களூரு மற்றும் கார்வார் துறைமுகங்களுக்கு வரும். அங்கிருந்து லாரிகள் மூலம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்படும்.
  இவ்வாறு அவர் கூறினார்.


Next Story