சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மண்டியாவில் காங்கிரஸ் பிரமுகர் கைது


சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மண்டியாவில் காங்கிரஸ் பிரமுகர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 9:40 PM GMT (Updated: 11 May 2022 9:40 PM GMT)

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் மண்டியாவில் காங்கிரஸ் பிரமுகரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். பா.ஜனதா பெண் பிரமுகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு:

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு

  கர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறாா்கள். இவ்வழக்கில் போலீஸ் அதிகாரிகள், பா.ஜனதா பெண் பிரமுகர் திவ்யா, காங்கிரஸ் பிரமுகர்களான மகாந்தேஷ் பட்டீல், ருத்ரேகவுடா பட்டீல் உள்ளிட்ட 55-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு கலபுரகி மாவட்டத்தில் தான் நடந்ததாக கூறப்பட்டது.

  ஆனால் தற்போது ஹாசன், பெங்களூரு, துமகூருவுக்கும் பரவி இருக்கிறது. ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த கிராம பஞ்சாயத்து தலைவர், புரசபை தலைவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் கொடுக்கும் தகவல்களின் பேரில் முறைகேட்டில் தொடர்புடையவர்களை சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகிறார்கள்.

காங்கிரஸ் பிரமுகர் கைது

  இந்த நிலையில், இவ்வழக்கு தொடா்பாக மண்டியாவில் நேற்று காங்கிரஸ் பிரமுகரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர், மண்டியா மாவட்டம் நாகமங்களாவை சேர்ந்த சரத் ராமண்ணா என்பவர் ஆவார். இவர், நாகமங்களா இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஆவார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மந்திரிக்கு நெருக்கமானவர் என்பதும் தொியவந்துள்ளது.

  சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதானவர்களுடன் சரத் ராமண்ணா தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள். மண்டியாவில் கைதான சரத் ராமண்ணாவை பெங்களூருவுக்கு அழைத்து வந்து சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திவ்யா சிறையில் அடைப்பு

  இதற்கிடையில், இவ்வழக்கில் கைதான பா.ஜனதா பெண் பிரமுகர் திவ்யா நேற்று கலபுரகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள, அவரது கணவர் ராஜேசை, திவ்யா பார்த்தார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கணவருடன், திவ்யாவை பேச போலீசார் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது.

  இந்த நிலையில், இவ்வழக்கு தொடர்பாக போலீஸ் நியமன பிரிவில் பணியாற்றிய 4 உயர் போலீஸ் அதிகாரிகளிடம் நேற்று சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். அவர்களுக்கு முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து 4 பேரிடமும் விசாரித்து போலீசார் தகவல்களை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

Next Story