கஞ்சா விற்ற 53 பேர் கைது


கஞ்சா விற்ற 53 பேர் கைது
x
கஞ்சா விற்ற 53 பேர் கைது
தினத்தந்தி 12 May 2022 2:55 PM IST (Updated: 12 May 2022 2:55 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்ற 53 பேர் கைது

கோவை

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதையடுத்து கோவை மாநகர பகுதியில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள தனிப்படை அமைத்து போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து தனிப்படையை சேர்ந்த போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அத்துடன் மாநகர பகுதியில் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்த நபர்களை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து பொட்டலம், பொட்டலமாக அதிகளவில் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

கோவை மாநகர பகுதியில் கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி முதல் கடந்த 27-ந் தேதி வரை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 45 இடங்களில் கஞ்சா விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதில் கஞ்சா விற்பனை செய்த 53 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 51 கிலோ 345 கிராம் கஞ்சா மற்றும் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் கல்லூரி மாணவர்கள் பலர் உள்ளனர். ஆந்திராவில் இருந்து தேனிக்கு கஞ்சா கடத்தி வரும் மர்ம ஆசாமிகள் அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் கோவைக்கு கஞ்சாவை கொண்டு வருகிறார்கள். பின்னர் அவர்கள் கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வருவது தெரியவந்து உள்ளது.

எனவே மாநகர பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். குறிப்பாக பள்ளி, கல்லூரி அருகே தீவிர சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. சில இடங்களில் வாட்ஸ்-அப்பில் குழு அமைத்து கஞ்சா விற்பனை நடப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே அது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகிறோம். எனவே கஞ்சா விற்பனை செய்வது தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story