கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தச்சர், பிளம்பர் பணிகளுக்கு இந்தியில் தேர்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் தச்சர், பிளம்பர், எலக்ட்ரீசியன் பணிகளுக்கு இந்தியில் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அணுமின் நிலைய நுழைவு வாயில் முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்தியில் தேர்வு நடத்த எதிர்ப்பு
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் சி மற்றும் டி பிரிவில் தச்சர், பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு வட மாநிலத்தவரை பணியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காக இந்தியில் தேர்வு நடத்துவதை கண்டித்தும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கக்கோரியும், 1971-ம் ஆண்டில் அணுமின் நிலையம் அமைய நிலம் வழங்கியவர்களுக்கு இதுவரை முறையான வேலை வாய்ப்பு வழங்கப்படாததை கண்டித்தும் செங்கல்பட்டு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று கல்பாக்கம் அணுமின் நிலைய நுழைவு வாயில் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செங்கல்பட்டு மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் காரணை ராதா தலைமை தாங்கினார். செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி வரவேற்றார். திருக்கழுக்குன்றம் முன்னாள் ஒன்றியகுழு தலைவர் பி.வி.கே.வாசு பா.ம.க. மாவட்ட தலைவர்கள் என்.கணேசமூர்த்தி, ஏ.ஜி.குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் தினேஷ்குகன், ஜீவரத்தினம், சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவரும், சட்டமன்ற பா.ம.க. தலைவருமான ஜி.கே.மணி கலந்து கொண்டு கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றி பேசினார். இந்த கண்ட ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய ரெயில்வே இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி, செங்கல்பட்டு முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம், பா.ம.க. மாநில இளைஞர் அணி செயலாளர் பொன்.கங்காதரன், மாமல்லபுரம் நகர செயலாளர் ராஜசேகர், ஒன்றிய நிர்வாகிகள் பட்டிக்காடு ராஜேந்திரன், நைனியப்பன், மகளிர் அணி நிர்வாகிகள் லோகநாயகி, செல்விகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைய நிலம் கொடுத்து வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட சதுரங்கப்பட்டினம், குன்னத்தூர், வெங்கப்பாக்கம், நெய்குப்பி, கொக்கிலமேடு, புதுப்பட்டினம், கடம்பாடி, மணமை, பூந்தண்டலம், நல்லூர், மெய்யூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த நில உரிமையாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story