படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்பு


படகு மூழ்கியதால் நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 12 May 2022 4:35 PM IST (Updated: 12 May 2022 4:35 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே சங்கு குளிக்க சென்றபோது, `அசானி' புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் படகு மூழ்கி நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே சங்கு குளிக்க சென்றபோது, `அசானி' புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் படகு மூழ்கி நடுக்கடலில் தத்தளித்த 11 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
`அசானி' புயல்
வங்கக்கடலில் உருவான `அசானி' புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. அதேபோன்று வானம் மேக மூட்டமாக காணப்படுகிறது.
நேற்று முன்தினம் மணிக்கு சுமார் 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. அதே நேரத்தில் கடலும் கொந்தளிப்பாக காணப்பட்டது. 
சங்கு குளித்தல்
இந்த நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் குழந்தை தெரசம்மாள் தெருவை சேர்ந்த ரகீம் (வயது 42) என்பவருக்கு சொந்தமான நாட்டுப்படகில், அதே பகுதியை சேர்ந்த அப்துல்காதர் (42), அசன் (40), மைதீன் (45), சதன் (35), மீரான் (45), கிஜோ (25), கனி மரைக்காயர் (45), ரபிக் உள்பட 11 மீனவர்கள் சங்கு குளிப்பதற்காக புறப்பட்டனர்.
11 பேரும் திரேஸ்புரத்தில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை 6 மணிக்கு கடலுக்கு சென்றனர். மாலையில் தூத்துக்குடியில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் புதிய துறைமுகத்துக்கு கிழக்கே சங்கு குளித்து கொண்டு இருந்தனர். அப்போது கடலில் மேல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் கடல் கொந்தளிப்பாக இருந்ததாக கூறப்படுகிறது.
நடுக்கடலில் தத்தளிப்பு
அப்போது எழுந்த அலைகள் தொடர்ச்சியாக வந்து படகின் மீது மோதிக்கொண்டே இருந்தன. திடீரென எதிர்பாராதவிதமாக படகில் இருந்த பலகை உடைந்து ஓட்டை விழுந்தது. இதனால் கடல் நீர் மளமளவென படகுக்குள் வரத் தொடங்கியது. படகில் இருந்த மீனவர்கள் அதனை தடுக்க முயன்றும் எந்த பலனும் அளிக்கவில்லை. இதை பார்த்த மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து படகு மெல்ல மெல்ல கடலுக்குள் மூழ்கத் தொடங்கியது. இதனால் படகில் இருந்த 11 மீனவர்களும் உதவி கோரி கூச்சல் போட்டனர். தொடர்ந்து படகு மூழ்கியதால் மீனவர்கள் சுமார் அரை மணி நேரமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்தனர்.
மீட்பு
இதை அறிந்ததும் அந்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த சக மீனவர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த 11 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு 11 மீனவர்களும் திரேஸ்புரத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
நேற்று மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மூழ்கிய படகை மீட்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். மூழ்கிய நாட்டுப்படகில் கயிறு கட்டி அதை விசைப்படகு மூலம் இழுத்து கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story