வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை


வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 12 May 2022 4:39 PM IST (Updated: 12 May 2022 4:39 PM IST)
t-max-icont-min-icon

வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்து திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு ஒன்றியம் களாம்பாக்கம் கிராமத்தில் 91 பேர் காலம் காலமாக வசித்து வரும் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி தொடர்ந்து மனு அளித்து வந்தனர். இருப்பினும் அவர்கள் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேற்கொண்ட 91 பேரும் களாம்பாக்கம் கிராமத்தில் இருந்து தலைமைச்செயலகத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மேற்கண்ட 91 பேரும் தங்களுக்கு கால தாமதம் செய்யாமல் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதை தொடர்ந்து அரசு அதிகாரிகள் களாம்பாக்கம் கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் வீட்டுமனை பட்டா கொடுக்காமல் வீட்டுமனை பட்டா வழங்கியதாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர். இதை அறிந்த பொதுமக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர்ந்து போராடிவரும் தங்களுக்கு இதுநாள் வரையிலும் வீட்டுமனை பட்டா வழங்காததை கண்டித்தும், உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தியும், காலதாமதம் செய்யும் அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story