பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகள்
பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் இலவச மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது என்று திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் வனத்துறை அதிகாரி கூறினார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம், ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் பொன்ராஜ் முன்னிலை வகித்தார். செயலாளர் கிரி அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கான அமர்வு படியை 10 மடங்கு உயர்த்தி வழங்க உத்தரவிட்டதற்காகவும், திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து நலத்திட்ட உதவி வழங்கியதற்காகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, அலுவலக செலவினங்களை அங்கீகரிப்பது உள்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கூட்டத்தில் கலந்துகொண்ட வனத்துறை அதிகாரி பேசுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பசுமை தமிழகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பொதுமக்கள், விவசாயிகளுக்கு தேக்கு, சவுக்கு, வேம்பு உள்ளிட்ட 20 வகை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. தற்போது ரூ.12 லட்சம் மதிப்பிலான மரக்கன்றுகள் வனவிரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது. மரக்கன்றுகள் வளர்த்து சுற்றுப்புற சூழலை பாதுகாக்க விருப்பம் உள்ளவர்களை கண்டறிய கவுன்சிலர்கள் உதவ வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story