தூத்துக்குடி கடல் தீவுகளில் திடீர் சோதனை
இலங்கையில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து தூத்துக்குடி கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள தீவுகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
தூத்துக்குடி:
இலங்கையில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து தூத்துக்குடி கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள தீவுகளில் கடலோர பாதுகாப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அகதிகள் போர்வையில் ஊடுருவ வாய்ப்பு
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் கலவரமாக மாறி உள்ளது. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.
இலங்கை சிறையில் இருந்து குற்றவாளிகள் 50-க்கும் மேற்பட்டவர்கள் தப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவ்வாறு தப்பியவர்கள், படகு மூலம் அகதிகள் போர்வையில் தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. மேலும் வேறு பயங்கரவாதிகளும் வர வாய்ப்பு இருப்பதாகவும் அஞ்சப்படுகிறது.
படகுகள் மூலம் ரோந்து
இதனால் கடலோர காவல் பணியில் ஈடுபட்டு இருக்கும் இந்திய கடற்படையினர் மற்றும் தமிழக கடலோர காவல் படையினர் விழுப்புடன் பணியாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி கடல் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படையினர் கடலில் படகு மூலம் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 2-வது நாளாக கடலோர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது.
தீவுகளில் சோதனை
தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் படகு மூலம் கடலோர பகுதிகளில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது மீன்பிடி படகுகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் வருகிறார்களா? என்று ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளிலும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். தீவு பகுதிகளில் யாரேனும் பதுங்கி உள்ளார்களா? என்று கண்காணித்தனர். இந்த திடீர் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story