ராணுவ வீரர் கோர்ட்டில் சரண்
மூதாட்டி கொலை வழக்கில் தேடப்பட்ட ராணுவ வீரர் தேனி கோர்ட்டில் சரண் அடைந்தார்.
தேனி:
மூதாட்டி கொலை
தேனி அருகே வாழையாத்துப்பட்டி ஒக்கலிகர் தெருவை சேர்ந்த சுப்புராஜ் மகன் கண்ணையன் (வயது 38). இவர், பஞ்சாப் மாநிலம் பட்டான்கோடு பகுதியில் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.
கடந்த மாதம் 22-ந்தேதி இவர், பஞ்சாப்பில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவருடைய வீட்டுக்கு அருகில் அவருடைய பெரியம்மா முத்தம்மாள் (68) நின்று கொண்டு இருந்தார்.
அவரை பார்த்ததும் கண்ணையன் அரிவாளால் முத்தம்மாளை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
தனது மனைவி பிரிந்து சென்றதற்கு முத்தம்மாள் தான் காரணம் என்றும், அவர் தனக்கு செய்வினை வைத்து விட்டதாகவும் ஏற்கனவே கண்ணையன் பிரச்சினை செய்து வந்த நிலையில் இந்த கொலையை செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்தார்.
கோர்ட்டில் சரண்
இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு கடந்த வாரம் மதுரை ஐகோர்ட்டில் கண்ணையன் மனு தாக்கல் செய்தார். ஆனால் அவருடைய மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் அவர், தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அவர் 15 நாட்கள் கோர்ட்டு காவலில் தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக பழனிசெட்டிபட்டி போலீஸ் தரப்பில் தேனி கோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.
Related Tags :
Next Story