ரூ85 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்


ரூ85 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்
x
தினத்தந்தி 12 May 2022 5:53 PM IST (Updated: 12 May 2022 5:53 PM IST)
t-max-icont-min-icon

ரூ85 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.85¾ கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்தை காணொலிக்காட்சி மூலமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 
கூட்டுக்குடிநீர் திட்டம்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் உடுமலை ஒன்றியங்களை சேர்ந்த 5 பேரூராட்சிகள் மற்றும் 318 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.85 கோடியே 75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சந்தைப்பேட்டையில் மேம்படுத்தப்பட்ட மீன் சந்தை ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை காணொலிக்காட்சி மூலமாக சென்னையில் இருந்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை தொடங்கி வைத்தார்.
இதற்காக திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நிகழ்ச்சி அரங்கு தயார்படுத்தப்பட்டு இருந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பேசும்போது, கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக 2 லட்சத்து 83 ஆயிரம் மக்கள் குடிநீர் பெற்று பயன்பெறுவார்கள். இதன் மூலம் மக்களுக்கு போதுமான குடிநீரை வழங்க முடியும். சந்தைப்பேட்டை மீன் மார்க்கெட் மேம்படுத்தப்பட்டு திறக்கப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்தார்.
அமைச்சர்கள் பங்கேற்றனர்
இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, சுப்பராயன் எம்.பி., மேயர் தினேஷ்குமார் ஆகியோர் பங்கேற்றார்கள். கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்-அமைச்சருக்கு உடுமலை ஒன்றியம் காமநாயக்கனூர் ஊராட்சியை சேர்ந்த பெண் நன்றி தெரிவித்து பேசினார்.

Next Story