பொம்மை வியாபாரியிடம் ரூ.6 கோடி பறிப்பு- இன்ஸ்பெக்டர் உள்பட 10 பேர் இடைநீக்கம்
பொம்மை வியாபாரியிடம் ரூ.6 கோடியை பறித்த, மும்ரா போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
தானே,
பொம்மை வியாபாரியிடம் ரூ.6 கோடியை பறித்த, மும்ரா போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 10 போலீசார் பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.
ரூ.30 கோடி கைப்பற்றிய போலீசார்
தானே அருகே மும்ராவை சேர்ந்தவர் பைசல் மேமம். இவர் பொம்மை வியாபாரியாகவும், கட்டுமான அதிபராகவும் இருந்து வருகிறார். கடந்த 11-ந் தேதி அவரது வீட்டில் சட்டவிரோதமாக பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மும்ரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில், போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.30 கோடியை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
ரூ.6 கோடி பறிப்பு
இதுதொடர்பாக, வியாபாரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் தான் உழைத்து சம்பாதித்த பணம் என போலீசாரிடம் தெரிவித்தார். இருப்பினும் போலீசார் இந்த பணத்தை விடுவிக்க ரூ.6 கோடி தங்களுக்கு தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கு பொம்மை வியாபாரி ரூ.2 கோடி தருவதாக கூறி ஒப்புக்கொண்டார். இருப்பினும், போலீசார் ரூ.6 கோடியை எடுத்து கொண்டு மீதி ரூ.24 கோடியை திருப்பி வழங்கினர்.
கமிஷனரிடம் புகார்
இதுதொடர்பாக, வியாபாரி தானே போலீஸ் கமிஷனர் ஜெய்தீப் சிங் மற்றும் உள்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் நடத்திய விசாரணையில். முறைகேடாக வியாபாரிடம் இருந்து ரூ.6 கோடி பறித்தது தெரியவந்தது.
பணம் பறித்த வழக்கில் இன்ஸ்பெக்டர் கீதாராம் சேவாலே, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவி மாதானே, ஹர்சல் காலே, போலீஸ்காரர்கள் பங்கஜ் கெய்கர், ஜக்தீஷ் காவித், திலிப் கிர்பன், பிரவின் கும்பார், அங்குஷ் வைத்யா, லலித் மகாஜன், நிலேஷ் சாலுங்கே என 10 போலீசாருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
பணி இடைநீக்கம்
இதையடுத்து, 10 போலீசாரையும் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்து, துறை ரீதியான விசாரணை நடத்த கமிஷனர் உத்தரவிட்டார்.
மும்ரா போலீஸ் நிலையத்தில் 10 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-----
Related Tags :
Next Story