புதிய பஸ் நிலைய விரிவாக்கத்துக்கு கோவில் வசம் உள்ள நிலத்தை மீட்க நடவடிக்கை
வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்கத்துக்கு கோவில் வசம் உள்ள நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வேலூர்
வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்கத்துக்கு கோவில் வசம் உள்ள நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய பஸ் நிலையம்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.52 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. அங்கு வணிக வளாகம், கழிப்பறை வசதி, சுத்திகரிகப்பட்ட குடிநீர், தானியங்கி வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, ஓய்வறை, வாகனங்கள் நிறுத்துமிடம் (பார்க்கிங்) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தற்போது புதிய பஸ் நிலையத்தில் பிளாட்பாரத்தில் செங்கற்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. வர்ணம் பூசும் பணி, மின்சார வசதி உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் பஸ் நிலைய பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ் நிலைய பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நிலத்தை மீட்க நடவடிக்கை
இதுகுறித்து அவர் கூறுகையில், பஸ்நிலையத்தில் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. வர்ணம் தீட்டும் பணி மற்றும் மின்விளக்குகள் பொருத்தும் பணி, குடிநீர் குழாய்கள் இணைப்பு பணி உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.
செல்லியம்மன் கோவில் வளாகத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 998 சதுர மீட்டர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நிலத்தை மீட்பது அல்லது அதற்கு பதிலாக பஸ் நிலையம் முன்பு உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தை பெறுவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
புதிய பஸ் நிலையத்தில் உள்ள வீரபத்ரசாமி கோவிலை அப்புறப்படுத்திவிட்டு அங்குள்ள சாமி சிலையை புதிதாக முத்து மண்டபம் பகுதியில் கட்டப்பட்டு வரும் கோவிலில் பிரதிஷ்டை செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
புதிய பஸ் நிலைய பணிகள் முழுமையாக நிறைவடைந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பஸ் நிலையத்தை திறந்து வைப்பார் என்றார்.
ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தியும் புதிய பஸ் நிலைய விரிவாக்க பணிகளுக்கு கோவில் வசம் உள்ள நிலத்தை மீட்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பு
வேலூர் புதிய பஸ் நிலையத்தின் நுழைவு பகுதியில் ரூ.35 லட்சத்தில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் வசதி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 48 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த மின்சாரத்தை பஸ்நிலையத்தில் 500 மின்விளக்குகளுக்கும், சுமார் 100 மின்விசிறிகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது. தேவைக்கேற்ப கூடுதலாக சூரியமின்சக்தி தகடுகளும் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் வேலூர் மாநகராட்சிக்கு மின் கட்டணம் பெருமளவில் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story