திண்டுக்கல் :
திண்டுக்கல் அருகேயுள்ள நொச்சியோடைப்பட்டியை சேர்ந்தவர் சவுந்தரராஜ பெருமாள் (வயது 45). இவர் கூவனூத்து ஊராட்சி மன்ற துணைத்தலைவராக உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள குலக்காரன்பட்டி செங்குளத்தை மீன் பிடிப்பதற்கு குத்தகைக்கு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வடகாட்டுப்பட்டியை சேர்ந்த தாமஸ் பெர்னாண்டஸ் (45), தனது நண்பர்களுடன் செங்குளத்தில் இரவு நேரத்தில் மீன் பிடித்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த சவுந்தரராஜ பெருமாள் அவர்களிடம் மீன் பிடிக்க கூடாது என எச்சரித்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தாமஸ் பெர்னாண்டஸ், அவரது நண்பர்கள் குழந்தைவேலு (35), யோவான் (48) ஆகிய 3 பேர் சேர்ந்து சவுந்தரராஜ பெருமாளை தாக்கியதாக தெரிகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தாமஸ் பெர்னாண்டஸ் உள்பட 3 பேரை தேடி வந்தார். இந்நிலையில் நேற்று அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.