மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம்


மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம்
x
தினத்தந்தி 12 May 2022 6:49 PM IST (Updated: 12 May 2022 6:49 PM IST)
t-max-icont-min-icon

மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம்

திருப்பூர், மே.13-
கோடைகாலத்தில் தேவை அதிகமாக உள்ளதால் தடையின்றி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று திஷா கமிட்டி கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
குடிநீர் வினியோகம்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று காலை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் திஷா நடைபெற்றது. கூட்டத்துக்கு கமிட்டியின் தலைவர் சுப்பராயன் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் வினீத் வரவேற்றார். செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:
அரசு பொறுப்பேற்ற பின் 2வது திஷா கமிட்டி கூட்டம் இதுவாகும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பணிகள் நடைபெறாமல் தேங்கி விட்டது. அதையெல்லாம் ஈடுசெய்யும் அளவுக்கு பணிகளை விரைந்து முடிக்க வேண்டிய நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தொலைநோக்கு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மக்களுக்கு தேவையான குடிநீர் கிடைக்கும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. கோடைகாலம் தொடங்கி விட்டதால் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. மக்களுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் துறைவாரியாக பணிகளை ஆய்வு செய்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து வந்த ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். அவர்கள் தெரிவித்த கோரிக்கைகள் வருமாறு:-
முறைகேடு
 உடுமலை ஒன்றியம் கணக்கம்பாளையம் ஊராட்சியில் எந்தவித ரசீதும் வழங்காமல் ரூ.20 ஆயிரம் வரை மக்களிடம் வசூலிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க வேண்டும். இதற்கு உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடத்துக்குளம் பேரூராட்சி பகுதிக்கு தினமும் 15 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் 8 முதல் 10 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் ழுமுமையான ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 27 ஆயிரத்து 921 தனிநபர் இல்லக்கழிப்பிடம் அமைக்க கணக்கெடுப்பு நடந்துள்ளது. இதற்கு கூடுதல் மானியம் வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
 நிவாரணத்தொகை
கூட்டத்தில், கொரோனா தொற்று காலத்தில் பணிபுரிந்து இறந்த தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் கிராம நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் என 8 குடும்ப வாரிசுதாரர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.1½ கோடி மதிப்பில் நிவாரண தொகை, திருப்பூர் தொட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 2 பேர் நீரில் மூழ்கி இறந்ததற்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிவாரணத்தொகை ஆகியவற்றை செய்தித்துறை அமைச்சர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார், ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி, துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

Next Story