சேந்தமங்கலம் அருகே, சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சேந்தமங்கலம் அருகே, சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
சேந்தமங்கலம்:
சேந்தமங்கலம் அருகே சீரான குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
குடிநீர் வினியோகம்
சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி ஊராட்சியில் உள்ள அருந்ததியர் தெருவில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை என பொது குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அந்த சமயம் சுமார் ½ மணி நேரம் மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் அங்குள்ள 7 ஆழ்துளை கிணறுகள் மூலம் அரசு அலுவலகங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றும், அருந்ததியர் தெருவிற்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுவது இல்லை என்றும், அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்றும் புகார் எழுந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
பேச்சுவார்த்தை
இதனால் ஆத்திரமடைந்த அருந்ததியர் தெரு மக்கள் நேற்று காலை சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் புதன்சந்தை செல்லும் பிரதான சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்த சேந்தமங்கலம் வருவாய் ஆய்வாளர் தங்கராஜ், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மணிமாலா சின்னசாமி, கிராம நிர்வாக அலுவலர் சத்தியசீலன், ஊராட்சி மன்ற தலைவர் திலகம் சண்முகம், சேந்தமங்கலம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை ஒன்றிய அலுவலகத்திற்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்கவும், ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் கூறினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story