நாமக்கல்லில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் விசாரணை
நாமக்கல்லில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை பறிப்பு சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் விசாரணை
நாமக்கல்:
நாமக்கல்லில் மூதாட்டியிடம் 6 பவுன் நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 2 சந்தேக நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 பவுன் நகை பறிப்பு
நாமக்கல் போதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வரதம்மாள் (வயது 77). இவர் நேற்று காலை வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்குவதற்காக முல்லைநகரில் உள்ள மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது கே.கே.பி தெரு வழியாக நடந்து சென்றபோது, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென வரதம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத வரதம்மாள் திருடன், திருடன் என சத்தம் போட்டார். அக்கம்பக்கத்தில் உள்ள நபர்கள் ஓடி வருவதற்குள் அங்கிருந்து மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.
புகைப்படங்கள் வெளியீடு
பின்னர் இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் செல்லும் 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.
இதைதொடர்ந்து அவர்கள் இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள போலீசார், இவர்களை பற்றி தகவல் தெரிந்தால் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாமக்கல் சுற்றுவட்டார பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story