வைரஸ் பரவுவதால் எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்; மந்திரி சுதாகர் உத்தரவு
கேரளாவில் தக்காளி வைரஸ் பரவி வருவதால் கேரளா-கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் தீவிரமாக கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
பெங்களூரு:
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
சிகிச்சை பெற வேண்டும்
தக்காளி வைரஸ் புதிதாக வந்த காய்ச்சல் அல்ல. இது கேரளாவில் கடந்த பல ஆண்டுகளாக இருக்கிறது. இது அந்த மாநிலத்தில் சில பகுதிகளில் மட்டும் பரவுகிறது. இது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தான் அதிகமாக தாக்குகிறது. உடலின் தோள் பகுதியில் புண் போல் பாதிப்பு சிவப்பு நிறத்தில் ஏற்படுகிறது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கேரள அரசு சுகாதாரத்துறையுடன் கர்நாடக சுகாதாரத்துறையினர் தொடர்பில் உள்ளனர். கேரளாவில் இருந்து கர்நாடகம் வரும் பயணிகள் குறிப்பாக குழந்தைகளை கண்காணிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். கேரளா-கர்நாடக எல்லையோர மாவட்டங்களில் உள்ள மக்களை குறிப்பாக குழந்தைகளை தீவிரமாக கண்காணிக்க சுகாதாரத்துறையிருக்கு உத்தரவிட்டுள்ளேன். பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.
3-வது டோஸ் தடுப்பூசி
தக்காளி வைரஸ் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்படுகின்றன. கர்நாடகத்தில் இதுவரை தக்காளி வைரஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. கொரோனாவுக்கும், தக்காளி வைரசுக்கும் தொடர்பு கிடையாது. கொரோனா 4-வது அலையின் தீவிரம் குறைவாக தான் உள்ளது. ஆனால் அனைவரும் 3-வது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
Related Tags :
Next Story