பொள்ளாச்சியில் போலீசாருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள்; வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு


பொள்ளாச்சியில் போலீசாருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள்; வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 12 May 2022 9:00 PM IST (Updated: 12 May 2022 9:00 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் போலீசாருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது குறித்து காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் போலீசாருக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது குறித்து காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு செய்தார்.

மேலாண்மை இயக்குனர் ஆய்வு

பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் போலீஸ் குடியிருப்பு இருந்தது. குடியிருப்பு கட்டி 37 ஆண்டுகள் ஆவதால் பழுதடைந்து காணப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் அங்கு இருந்தவர்களை காலி செய்து விட்டு பழுதடைந்த கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. இந்த நிலையில் சட்டசபையில் காவல் துறை மானிய கோரிக்கையின் போது பொள்ளாச்சியில் போலீஸ் குடியிருப்பு கட்ட வேண்டும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 266 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என்று பதில் அளித்து பேசினார். இந்த நிலையில் பொள்ளாச்சியில் புதிதாக போலீஸ் குடியிருப்பு கட்டப்பட உள்ள இடத்தை தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 


மேலும் போலீஸ் திருமண மண்டபத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஆனைமலையில் ரூ.4 கோடியே 69 லட்சம் செலவில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 28 போலீசாருக்கு வீடுகள் கட்டப்பட்டு வருவதை மேலாண்மை இயக்குனர் ஏ.கே.விஸ்வநாதன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மணி, வீட்டு வசதி வாரிய கண்காணிப்பு பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் ஜனார்த்தனன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் ஜானகிராமன் ஆய்வு உடன் இருந்தனர்.

266 வீடுகள்

இதுகுறித்து காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க-.ஸ்டாலின் பொள்ளாச்சியில் போலீசாருக்கு 266 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும் என்று அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக கட்டிடம் கட்டும் இடம் ஆய்வு செய்யப்பட்டு உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும் என்றார். வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறுகையில், பொள்ளாச்சியில் ரூ.75 கோடி செலவில் 266 வீடுகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு நிதி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது முதல்-அமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து மேலாண்மை இயக்குனர் ஆய்வு செய்து உள்ளார். புதிய குடியிருப்பில் இன்ஸ்பெக்டர்களுக்கு 10 வீடுகள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 30 வீடுகள் மற்றும் போலீசாருக்கு 226 வீடுகள் சேர்த்து மொத்தம் 266 வீடுகள் கட்டப்படுகிறது. மேலும் லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. நிதி ஒதுக்கப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும் என்றனர்.

Next Story