தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 12 May 2022 9:08 PM IST (Updated: 12 May 2022 9:19 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 99628 18888 என்ற வாட்ஸ் -அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

முட்செடிகள் அகற்றப்படுமா?


கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து புயல்நிவாரண கூடம் செல்லும் சாலையோரங்களில் முட்செடிகள் வளர்ந்து அகற்றப்படாமல் உள்ளன. இதனால் இந்த குறுகிய சாலையில் வாகனங்கள் செல்லும்போது அவ்வழியாக நடந்து செல்லும் முதியவர்கள் ஒதுங்கி நிற்கக்கூட முடியாத நிலை உள்ளது. இதனால் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் விபத்துகளும் அரங்கேறி வருகின்றன. எனவே சாலையோரம் வளர்ந்துள்ள முட்செடிகளை வெட்டி அகற்ற பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமிர்தலிங்கம், கோத்தகிரி.


தினத்தந்தி செய்தி எதிரொலி:
பழுதான சாலை சீரமைப்பு

கோவை நல்லாம்பாளையத்தில் உள்ள அனைத்து பிரதான சாலைகளும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இதனால் வாகன விபத்துகள் நடந்த வண்ணம் இருந்தது. மேலும் பொதுமக்களும் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். அதனால் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் உள்பட பல்ேவறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுபற்றிய செய்தி தினத்தந்தி நாளிதழில் புகார் பெட்டியில் பிரசுரமாகி இருந்தது. இதையடுத்து குண்டும், குழியுமாக காணப்பட்ட சாலையை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைத்தனர். அதனால் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், மக்கள் நலன் கருதி செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கும் நன்றி.

பழனிசாமி, நல்லாம்பாளையம்.

நடப்பதற்கு இடையூறு 

கோத்தகிரி அருகே தேனாடு கிராமத்தில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் காங்கிரீட் நடைபாதையில் பொதுமக்கள் நடப்பதற்கு இடையூறாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே ஊராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய்களை நடப்பதற்கு இடையூறின்றி செல்லும் வகையில் அமைக்கவோ அல்லது நிலத்தில் பதிக்கவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோபால், கோத்தகிரி.
  
தேங்கி நிற்கும் கழிவுநீர் 

கோவை கிழக்கு மண்டலம் அலுவலகம் அருகே உள்ள சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர் கழிவுநீர் போல் கடந்த சில வாரங்களாக காட்சி அளிக்கிறது. இதனால் ெகாசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

குமார், கோவை.
  
 கெட்டுப்போன மீன்கள் விற்பனை

பொள்ளாச்சிநகர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கெட்டுப்போன மீன்கள் என தெரியாமல் சாப்பிடுபவர்கள் பல்வேறு விதமான வயிறு உபாதைக்கு ஆளாகுவர். எனவே, அதிகாரிகள் மீன் கடைகளில் சோதனை செய்ய வேண்டும். மேலும் தரமான மீன்களை விற்பனை செய்ய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா?

ஜான்சன், பொள்ளாச்சி.
  
 குப்பைகள் அகற்றப்படுமா? 

  கோவை சுங்கம் பைபாஸ் ஆல்வின் நகரில் பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாததால் சாலை முழுவதும் குப்பையாக நிறைந்து குவிந்து காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றமும் சுகாதார சீர்கேடும் நிலவி வருகிறது. மேலும் ரோட்டில் பொதுமக்கள் மூக்கை பிடித்தப்படி செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

ஆல்வின், கோவை.
  
 ரோட்டோரத்தில் இறைச்சி கழிவுகள்

 கிணத்துக்கடவு ஆர்.எஸ்.ரோடு பகுதியில் இருந்து டாஸ்மாக் கடை வழியாக சொலவம் பாளையம் செல்லும் வழியில் இரவு நேரங்களில் கோழி கழிவுகளை சிலர் சாக்கு பையில் கொண்டுவந்து ரோட்டோரம் வீசி செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொது மக்களுக்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, இறைச்சி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாச்சிமுத்து, கிணத்துக்கடவு.
  
 பழுதடைந்த சாலை 

 கோவை சிங்காநல்லூர் சிக்னல் அருகே உள்ள ரோடு மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும், தற்போது பெய்த மழை காரணமாக அந்த ரோட்டில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் 2 சக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்கள். இதனால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களும் சாலையை கடந்து செல்ல முடியாமல் உள்ளதோடு, நடக்க முடியாத நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே பழுதான சாலையை சீரமைப்பதோடு, தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மணிகண்டன், கோவை.

  
  
  


Next Story