மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் ஆடம்பர தேர்பவனி


மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் ஆடம்பர தேர்பவனி
x
தினத்தந்தி 12 May 2022 9:34 PM IST (Updated: 12 May 2022 9:34 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே மிக்கேல் அதிதூதர் தேவாலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு அருகே மைக்கேல்புரத்தில் பழமை வாய்ந்த புனித மிக்கேல் அதிதூதர் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருவிழா நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
அதனை தொடர்ந்து தினந்தோறும் மாலை நேரத்தில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி பங்குத்தந்தை மகிமை தலைமையில் தேவாலயத்தில் கூட்டு திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. 

தேர்பவனி

இதையடுத்து இரவு 10 மணி அளவில் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் வனத்து சின்னப்பர், புனித அந்தோணியார், ஆரோக்கிய மாதா, அன்னை தெரசா, காவல் சம்மனசு, செபஸ்தியார் உள்ளிட்ட சொரூபங்கள் வைக்கப்பட்டது. இதையடுத்து தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து மீண்டும் தேவாலயத்தை அடைந்தது.
 இதில் மைக்கேல்புரம், சவேரியார்பாளையம், ஈருடையாம்பட்டு, அருளம்பாடி, இளையாங்கண்ணி, மூங்கில்துறைப்பட்டு, விரியூர், பழையனூர், மையனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை மற்றும் ஊர் காரிய காரர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Next Story