மரக்காணம் அருகே குளத்தில் மூழ்கி தாத்தா-பேரன் பலி


மரக்காணம் அருகே குளத்தில் மூழ்கி தாத்தா-பேரன் பலி
x
தினத்தந்தி 12 May 2022 10:10 PM IST (Updated: 12 May 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே குளத்தில் மூழ்கி தாத்தா-பேரன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மரக்காணம்,

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள கரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கபாலி (வயது 50). கூலித்தொழிலாளி. இவரது மகள் கல்பனா. இவரை காஞ்சீபுரத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இவர்களது மகன் நிரஞ்சன் (11). இவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் நிரஞ்சன் தனது தாயார் கல்பனாவுடன் கரிப்பாளையத்தில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு வந்து இருந்தான்.

தண்ணீரில் மூழ்கினர்

நேற்று காலை கபாலியும், நிரஞ்சனும் அப்பகுதியில் உள்ள தாமரை குளத்துக்கு குளிக்க சென்றனர். அப்போது நிரஞ்சன் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீரில் தத்தளித்தபடி கூச்சல் போட்டான்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கபாலி பேரனை காப்பாற்ற முயன்றார். அப்போது கபாலியும் தண்ணீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மரக்காணம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பிணமாக மீட்பு

பின்னர் 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 2 பேரையும் பிணமாக மீட்டனர். அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி தாத்தா, பேரன் பலியான சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story