தனுஷ்கோடியில் தொடரும் கடல் சீற்றம்
அசானி புயல் எதிரொலியாக தனுஷ்கோடியில் கடல் சீற்றம் நேற்றும் தொடர்ந்தது. பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
ராமேசுவரம்,
அசானி புயல் எதிரொலியாக தனுஷ்கோடியில் கடல் சீற்றம் நேற்றும் தொடர்ந்தது. பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
தொடரும் கடல் சீற்றம்
வங்கக்கடலில் உருவான அசானி புயலானது ஒடிசா-ஆந்திரா இடையே வலுவிழக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த புயல் சின்னம் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. தனுஷ்கோடி பகுதியில் நேற்றும் கடல் சீற்றம் ெதாடர்ந்தது. கம்பிப்பாடு-அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட பகுதியில் கடல் நீரானது தடுப்பு கற்கள் மீது மோதி சாலை வரையிலும் வந்து சென்றது.
பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் மேல் நோக்கி ஆக்ரோஷமாக சீறி எழுந்ததையும், தடுப்புச்சுவரில் மோதி சாலை வரை கடல் நீரை சிதறடித்ததையும் கார், ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்தோடு நின்று வேடிக்கை பார்த்தனர். அதுபோல் முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் மோதி பல அடி உயரத்திற்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக எழுந்தன.
சுற்றுலா பயணிகள்
ஆபத்தை அறியாமல் சுற்றுலா பயணிகள் சிலர் துறைமுகத்தின் உள்பகுதி வரை சென்று அலைகளை செல்போனில் படம் எடுத்தனர். இதை தடுக்க அங்கு சோதனைச்சாவடியில் பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
Related Tags :
Next Story