ராமேசுவரம் மீனவர்கள் 12 பேர் நிபந்தனையுடன் விடுதலை
இலங்கை சிறையில் தவித்து வந்த ராமேசுவரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
இலங்கை சிறையில் தவித்து வந்த ராமேசுவரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
12 மீனவர்கள் கைது
ராமேசுவரத்தில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதியன்று ஒரு விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
கைதான மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் இலங்கை சிறையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக தவித்துவந்த 12 மீனவர்களும் நேற்று கிளிநொச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணைக்கு பின்னர், இன்னும் 15 ஆண்டுகளுக்கு எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது என்ற நிபந்தனையுடன் 12 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
படகு உரிமையாளருக்கு உத்தரவு
மேலும் படகு உரிமையாளர் வருகிற ஜூலை 5-ந் தேதி படகிற்கான அனைத்து ஆவணங்களுடன் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும், இல்லையென்றால் படகு இலங்கை அரசுைடமை ஆக்கப்படும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. விடுதலையான 12 மீனவர்கள் விரைவில் தமிழகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மண்டபத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களும் விரைவில் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரியவருகிறது.
Related Tags :
Next Story