இந்தியா முழுவதும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து 2024-ல் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை


இந்தியா முழுவதும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து  2024-ல் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் - அண்ணாமலை
x
தினத்தந்தி 13 May 2022 12:15 AM IST (Updated: 12 May 2022 10:35 PM IST)
t-max-icont-min-icon

இந்தியா முழுவதும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து 2024-ல் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என திருவாரூரில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

திருவாரூர்:-

இந்தியா முழுவதும் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து 2024-ல் பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கும் என திருவாரூரில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

ஆர்ப்பாட்டம்

திருவாரூர் தெற்கு வீதியின் பெயரை மாற்றுவதை கண்டித்து பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று தெற்கு வீதியில் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் ராகவன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் முன்னிலை வகித்தார். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

2 சாதனைகள்

தமிழகத்தின் கலாசாரத்தை மாற்றுவதற்கான முயற்சியுடன் தி.மு.க. செயல்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2 சாதனைகளை செய்து வருகிறது. அதில் ஒன்று மத்திய அரசின் திட்டங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்டுவது. மற்றொன்று ஊரின் பெயரை மாற்றுவது. 
திருவாரூர் தெற்கு வீதிக்கு கருணாநிதி பெயரை வைக்க நினைப்பது ஒரு மன வியாதி. குடும்ப அரசியலில் ஈடுபடுபவர்களுக்குத்தான் இந்த வியாதி வரும்.

விதிவிலக்கான கட்சி

காங்கிரஸ் கட்சி இந்த மனவியாதியில் 70 ஆண்டு காலமாக இருந்து வருகிறது. இதற்கு முற்றிலும் விதிவிலக்கான கட்சியாக பா.ஜனதா செயல்பட்டு வருகிறது. பிரதமர் நரேந்திரமோடி ஒரு ஆண்டுக்கு ரூ.44 லட்சம் கோடி பட்ஜெட் போடுகின்றவர். ஆனால் ஒரு திட்டத்துக்கு கூட அவர் தனது பெயரை வைத்தது இல்லை.
நாட்டையும், மக்களையும் முன்னிலைப்படுத்தி செயல்படுவது பா.ஜனதா கட்சி. தி.மு.க.வின் மன வியாதியை தியாகராஜசாமி நிச்சயம் குணப்படுத்துவார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு மலை பகுதியில் சாலை இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோன்று பல இடங்கள் உள்ளதால் அங்கு சாலை வசதியை செய்து கொடுத்து அந்த சாலைக்கு கருணாநிதி பெயரை வைக்கலாம்.

முற்றுகை போராட்டம்

திருவாரூர் தெற்கு வீதியின் பெயரை மாற்றமாட்டோம் என அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லாததால் தான் இந்த பிரம்மாண்டான கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி உள்ளோம். இதனை மீறி திருவாரூர் தெற்கு வீதிக்கு பெயர் மாற்றம் செய்ய நினைத்தால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் செயல்படாத அளவுக்கு பா.ஜனதா முற்றுகை போராட்டம் நடத்தும். 
இந்தியா முழுவதும் குடும்ப அரசியலுக்கும், குடும்ப ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும். 

பிரதமரின் கவனத்துக்கு...

பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்து வீடு கட்ட நினைத்த திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் லஞ்சம் கேட்கப்பட்டதால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பிரதமர், மக்கள் ஏழையாக இருக்க கூடாது, அவர்கள் வாழ்வில் உயர வேண்டும் என்பதற்காக வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
மத்திய அரசு திட்டத்தை நடைமுறைப்படுத்தினாலும் அதிலும் ‘ஸ்டிக்கர்’ ஒட்டுகின்ற தமிழக அரசுக்கும், எந்த திட்டத்தில் எவ்வளவு பணம் கையாடல் செய்யலாம் என நினைப்பவர்களுக்கும் மத்தியில் ஒரு இளைஞரின் உயிர் பறிபோனது என்பது வேதனைக்குரியது. இதற்கு யார் நீதி கொடுப்பார்? இந்த பிரச்சினை குறித்து பிரதமரின் கவனத்துக்கு நிச்சயம் கொண்டு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார். 

ஆறுதல்

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து வீடு கட்டும் திட்ட பணிகளுக்கு லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட மணிகண்டன் வீட்டுக்கு அண்ணாமலை நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Next Story