ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்


ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 12 May 2022 11:22 PM IST (Updated: 12 May 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம்

சிதம்பரம் அம்பேத்கர் தெருவில் பாலமன் வாய்க்கால் கரையோரம் 90-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் சிதம்பரம் நகர போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதிக்கு நேரில் சென்று வீடுகள் அனைத்தும் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், அதனால் அனைவரும் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று கூறி நோட்டீஸ் கொடுத்தனர்.
இதையடுத்து சிலர் தாங்களே முன்வந்து வீடுகளை காலி செய்து சென்றனர். மீதமுள்ளவர்கள் வீடுகளை காலி செய்வதற்கு அதிகாரிகள், கால அவகாசம் கொடுத்தனர். ஆனால் அவர்கள் வீடுகளை காலி செய்யாமல், தொடர்ந்து அப்பகுதியிலேயே வசித்து வந்தனர். 

வாக்குவாதம்

இந்த நிலையில் நேற்று காலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்காக அதிகாரிகள் பொக்லைன் எந்திரங்களுடன் அம்பேத்கர் தெருவுக்கு சென்றனர். அப்போது திரண்டு வந்த அந்த பகுதி மக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே அங்கு வந்த சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ், நகரமன்ற துணைத்தலைவர் முத்து ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும், நகரமன்ற துணைத்தலைவர் முத்துவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள், வீடுகளை தாங்களே அகற்றிக்கொள்வதாக தெரிவித்தனர்.

பரபரப்பு

அதனை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள், அங்கிருந்த பொது கழிவறையை மட்டும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி விட்டு சென்றனர். அப்போது அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையில் சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story