பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்து விஷம் குடித்த வாலிபர் சாவு வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்


பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்து விஷம் குடித்த வாலிபர் சாவு வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 13 May 2022 12:30 AM IST (Updated: 12 May 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்து விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

நன்னிலம்:-

பிரதம மந்திரி திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்து விஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார். 

வீடு கட்ட லஞ்சம்

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள வேலங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கமுதக்குடி கிராமத்தை சேர்ந்தவர் லெனின். இவருடைய மகன் மணிகண்டன்(வயது 25). தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு விண்ணப்பித்தார். இதையடுத்து வீடு கட்டிக்கொள்ள அரசிடம் இருந்து அனுமதி கிடைத்தது. 
அதன்பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் வீடு கட்டும் பணிகளை தொடங்கினார். இந்த நிலையில் வீடு கட்டும் திட்ட பணிகளுக்காக நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணி மேற்பார்வையாளராக(ஓவர்சீயர்) வேலை பார்க்கும் மகேஸ்வரன் என்பவர் தன்னிடம் லஞ்சம் வாங்கியதாகவும், இதனால் தான் கடனாளியாகி விட்டதாகவும் பேசி அதை மணிகண்டன் வீடியோவில் பதிவு செய்தார். அவர் உருக்கமாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

சிகிச்சை பலனின்றி சாவு

இதனிடையே லஞ்சம் கொடுத்ததால் மனமுடைந்த மணிகண்டன் பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பேரளம் போலீசார் மகேஸ்வரன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பணியிடை நீக்கம்

மேலும் திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலக பணி மேற்பார்வையாளர் மகேஸ்வரனை பணியிடை நீக்கம் செய்தார். மேலும் அவர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து உள்ளார். 
இந்த நிலையில் பேரளம் அருகே உள்ள கொல்லுமாங்குடியில் பா.ம.க.வினர் நேற்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மகேஸ்வரனை கைது செய்ய வேண்டும். மணிகண்டனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும். 

நிவாரணம் வழங்க வேண்டும்

வீட்டை அரசே கட்டிக்கொடுக்க வேண்டும். மணிகண்டனின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் உதவி கலெக்டர் பாலச்சந்திரன் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story