களக்காடு அருகே வியாபாரியை விரட்டிய கரடி
களக்காடு அருகே வியாபாரியை கரடி விரட்டியது.
களக்காடு:
களக்காடு மலையடிவார கிராமங்களில் கடந்த 2 மாதங்களாக வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. சிறுத்தை, கரடி, யானை, கடமான், பன்றிகள் விவசாய பயிர்களை நாசம் செய்வதுடன் விவசாயிகளை அச்சுறுத்தியும் வருகின்றன. சிதம்பரபுரத்தில் இருந்து அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோவில் செல்லும் சாலையில் கரடி சுற்றி வருகிறது. கடந்த 10-ந் தேதி கரடி கடித்துக் குதறியதில் தொழிலாளி சக்திவேல் (வயது 44) படுகாயம் அடைந்தார்.
இந்த நிலையில் சாலைநயினார் பள்ளிவாசலை சேர்ந்த பதநீர் வியாபாரி ஒருவர் நேற்று காலை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது எதிரே சாலையில் திடீரென கரடி வந்தது. அதை பார்த்ததும் அவர் சிறிது தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார். ஆனால் கரடி அவரை தாக்குவதற்கு ஓடி வந்தது. இதனால் அவர் பதறிப்போய் மோட்டார் சைக்கிளை திருப்பி, வந்த வழியாகவே வேகமாக சென்றார். கரடியும் சிறிது தூரம் அவரை விரட்டியவாறு சென்று பின்னர் நின்று விட்டது.
இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அவர் ஊருக்கு திரும்பினார். பொதுமக்களை அச்சுறுத்தி வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் பெரும்படையார், நாங்குநேரி தாலுகா செயலாளர் முருகன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலன், சிதம்பரபுரம் விவசாயிகள் சங்கம் ஜவஹர் மற்றும் நிர்வாகிகள் திருக்குறுங்குடி வனத்துறை அலுவலகத்தில் நேற்று நேரில் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story